ஐயோ கொல்றாங்களே ஐயோ கொல்றாங்களே: கருணாநிதி வாழ்வின் கசப்பான சம்பவம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

2001 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் மேம்பால ஊழல் வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியை தமிழக காவல்துறை கைது செய்த சம்பவம் எந்த அரசியல் தொண்டர்களாலும் மறக்கமுடியாத ஒன்று.

ஒரு தலைவரின் கைது மட்டும் செய்தியல்ல அவர் எப்படி கைது செய்யப்பட்டார் என்பதுதான் காலம் கடந்தும் நிற்கும் செய்தி.

சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த முத்துக்கருப்பன் தலைமையிலான காவல்படை கருணாநிதியின் வீட்டில் அதிகாலையில் நுழைந்து கைது செய்தது.

அந்த நேரத்தில் பொலிசாரை சற்றும் எதிர்பாராத கருணாநிதி முரசொலி மாறனுக்கு தொலைப்பேசியில் தகவல் தெரிவித்தார். இரவு உடையில் இருந்த கருணாநிதியை துணி மாற்றக்கூட அனுமதிக்கவில்லை காவல்துறை.

அணிந்திருந்த லுங்கியுடனே கைது செய்யப்பட்ட கருணாநிதியை பொலிசார் எங்கு அழைத்து செல்கின்றனர் என்பதே யாருக்கும் தெரியவில்லை. அப்போது ஓமந்தூரார் மாளிகைக்கு அருகில் இருந்த சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டதையறிந்து கனிமாழி, ராஜாத்தி அம்மாள் உள்ளிட்டோர் காரில் அங்கு ஓடிச் சென்றனர்.

அங்கிருந்து அவசரமாக வேப்பேரி அழைத்து செல்லப்பட்டார் கருணாநிதி, ஆனால் அதையும் போலீசார் வெளிப்படையாக செய்யவில்லை, முன்பக்கத்தில் பத்திரிக்கையாளர்களை அழைத்துவிட்டு பின்பக்கமாக வேறு காரில் கருணாநிதியை அழைத்து சென்று விட்டனர்.

பின்னர் வேப்பேரி காவல்நிலையம் அழைத்து வரப்படுவதாக கிடைத்த தகவல்படி கருணாநிதி குடும்பத்தார் அங்கு வந்தனர். அப்போது காவல்துறையினருடன் கருணாநிதி குடும்பத்தார் மல்லுக்கட்டு செய்தனர். எங்கே அழைத்து செல்கிறீர்கள் என்று கூறாமல் ஏன் அலைகழிக்கிறீர்கள் என்று கொந்தளித்தனர்.

பின்னர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டு ஜூலை 10ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. சிறையில் அடைப்பதற்காக கருணாநிதி அழைத்து செல்லப்பட்ட போது சிறை வாசலிலேயே அமர்ந்து சுமார் 1 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த சம்பவம் திமுகவினர் மத்தியில் இன்று வரை கசப்பான சம்பவமாகவே பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்