விரைவில் வெளியாகும் அறிக்கை: மருத்துவமனை வெளியே தொண்டர்கள் கதறல்

Report Print Arbin Arbin in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததை அடுத்து காவேரி மருத்துவமனை வளாகத்தில் தலைவர்களும் திமுக தொண்டர்களும் குவிந்து வருகின்றனர்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க தி.மு.க எம்.எல்.ஏ க்கள், டி.ஆர்.பி ராஜா, அன்பில் மகேஷ், செந்தில்குமார், வாகை சந்திரசேகர், செஞ்சி மஸ்தான், பல்லாவரம் கருணாநிதி, அன்பரசன் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.

மட்டுமின்றி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். இதையடுத்து சென்னைக்கு வருதற்காக தி.மு.க எம்.பி.க்கள் டெல்லியில் இருந்து புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சென்னை வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.

மட்டுமின்றி தே.மு.தி.க-வைச் சேர்ந்த சுதீஷ், காவேரி மருத்துவமனைக்குச் சென்று தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலைகுறித்து கேட்டறிந்தார்.

இதையடுத்துப் பேசிய அவர், `கருணாநிதியின் உடல்நிலைகுறித்து தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தேன். கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும்' என்று தெரிவித்தார்.

காவேரி மருத்துவமனை அருகில் தி.மு.க தொண்டர்கள் குவிந்துவருவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும், காவேரி மருத்துவமனைக்குச் செல்லும் வழிகள் மாற்றப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் காவேரி மருத்துவமனைக்குச் சென்று, கருணாநிதியின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார்.

அப்போது பேசிய அவர், `தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை ஏற்ற இறக்கமாக உள்ளது' என்று தெரிவித்தார். காவேரி மருத்துவமனைக்கு தி.மு.க நிர்வாகிகள் மட்டுமல்லாது, பல கட்சித் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் வரத் தொடங்கியுள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் முத்தரசன், வைரமுத்து, வாகை சந்திரசேகர் உள்ளிட்ட பலர் வருகைதந்துள்ளனர்.

காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியானதிலிருந்து, மருத்துவமனை இருக்கும் பகுதியில் தி.மு.க தொண்டர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். இதனால், அந்தச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மட்டுமின்றி காவேரி மருத்துவமனையில் இருந்து மேலும் ஒரு அறிக்கை இன்றிரவு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

தி.மு.க தலைவர் கருணாநிதி, கடந்த 27-ம் திகதி இரவு திடீர் ரத்த அழுத்தம் காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகிறார்.

மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினர், அவரது உடல்நிலைகுறித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தீவிர சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியின் உடல்நலம்குறித்து காவேரி மருத்துவமனை அவ்வப்போது அறிக்கை வெளியிட்டுவருகிறது.

அந்த வகையில் இன்று வெளியான அறிக்கையில், கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளித்துவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்