இளம்பெண் பலி: நாடு கடத்தப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தில் இருசக்கர வாகனத்தை போக்குவரத்து காவலர் எட்டி உதைத்ததில் பெண்ணொருவர் பலியான விவகாரத்தில், பொலிசாரை கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்ட நபர் நாடு கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் சூலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவர், தனது மனைவி உஷாவுடன் கடந்த மார்ச் 7ஆம் திகதி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்பொது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ், அவரது வாகனத்தை மறித்தார்.

ஆனால், வாகனச் சோதனையில் ராஜா நிற்காமல் சென்றதால், காவல் ஆய்வாளர் காமராஜ் தனது வாகனத்தில் விரட்டி பிடித்து ராஜாவின் இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்தார். இதில் நிலைதடுமாறி விழுந்ததில் உஷா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காமராஜின் இந்த செயலை பலரும் வன்மையாக கண்டித்தனர். அப்போது சங்கரலிங்கம் என்பவர் தமிழக பொலிசாரை கடுமையாக விமர்சித்து வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து, அவரின் மீது பொலிசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், சங்கரலிங்கத்தின் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை முடக்கிய பொலிசார், அவர் சிவகங்கை மாவட்டம் நெடுங்குளத்தை சேர்ந்தவர் என்பதை கண்டுபிடித்தனர்.

ஆனால், சங்கரலிங்கம் குவைத்தில் வேலை செய்து வந்தது பின்னர் தெரிய வந்தது. அதன் பின்னர், துரிதமாக செயல்பட்ட பொலிசார் சங்கரலிங்கத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் இறங்கினர்.

அதன்படி இந்திய உள்துறை செயலகம், வெளியுறவு அமைச்சகத்தின் மூலமாக குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்தது. அதன் அடிப்படையில் குவைத் அரசு, சங்கரலிங்கத்தை இந்தியாவுக்கு அனுப்பியது.

பின்னர், கடந்த மாதம் 30ஆம் திகதி இந்தியா திரும்பிய சங்கரலிங்கத்தை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து, திருச்சி பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்