காதல் திருமணம் செய்த ஜோடியை சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்ட இளம் ஜோடியை சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஊர் ஹர்தாஸ்பூர். இங்கு ரமேஷ் என்கிற ஹிதேஸ்(21) அதே கிராமத்தைச் சேர்ந்த நங்கிபாய்(19) என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

இவர்களது காதலுக்கு நங்கிபாயின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பின்னர், நங்கிபாய் தனது உறவினர் வீட்டில் காதல் கணவருடன் தஞ்சமடைந்தார். இதனை அறிந்த நங்கிபாயின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அதிகாலை நேரத்திலேயே நங்கிபாய்-ஹிதேஸ் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று, அவர்களை தாக்கி இழுத்துச் சென்றுள்ளனர்.

பின்னர், ஹிதேஸை அவர்களது வீட்டின் முன்பு உள்ள கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்துள்ளனர்.

நங்கிபாயையும் அவரது தந்தை, சித்தப்பா ஆகியோர் தாக்கியுள்ளனர். அப்போது அவர்களுக்கு ஆத்திரம் தீராததால், இருவரையும் கட்டாயப்படுத்தி சிறுநீரை குடிக்க வைத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் விரைந்து வந்து இளம் ஜோடியை மீட்டனர். அதன் பின்னர், நங்கிபாயின் தந்தை கெரம்சிங் மற்றும் சித்தப்பாக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இச்சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான சிலரை பொலிசார் தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்