செஸ் விளையாட்டில் தேசிய அளவில் சாதித்த 4 வயது சிறுமி

Report Print Kavitha in இந்தியா

சண்டிகரைச் சேர்ந்த சான்வி அகர்வால் என்ற நான்கு வயது சிறுமி பெண் குழந்தைகளுக்கான தேசிய செஸ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

செஸ் விளையாட்டில் ஐந்து வயதுக்கு உட்பட்டவர் பிரிவில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.

இது, இவர் பங்கேற்ற முதல் தேசிய செஸ் போட்டியாகும். அதுமட்டுமின்றி முதல் முயற்சியிலேயே இரண்டாம் இடத்தைத் தட்டி சான்வி சாதனைப் படைத்துள்ளார்.

இதற்கு முன்பும் சான்வி, 7 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சண்டிகர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி வாகை சூடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் சார்பில், கர்நாடகா சதுரங்க சங்கம், 7 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கான 32-வது தேசிய ஓப்பன் செஸ் போட்டியை எடுத்து நடத்தியது.

கர்நாடக மாநிலம் தும்கூரில், கடந்த 16-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டி, 9 நாள்கள் நடைபெற்றது.

இதில், பல மாநிலங்களிலிருந்து வந்த குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இந்தப் போட்டியில், 5 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில், சண்டிகரைச் சேர்ந்த சான்வி அகர்வால் என்ற சிறுமி கலந்துகொண்டார்.

இந்தத் தொடரில், தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய சான்வி, இரண்டாம் இடம் பிடித்து தேசிய அளவில் தனது திறமையை வெளிகாட்டி சாதனையை படைத்துள்ளார்.

இந்நிலையில், தேசியப் போட்டியில் வெற்றிபெற்றதால், 2019-ம் ஆண்டில் நடக்க உள்ள ஏசியன் யூத் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளார்.

இதுகுறித்து சான்வி கூறுகையில், “என் பெற்றோர்கள் செஸ் எப்படி விளையாட வேண்டும் என்று கற்றுக்கொடுத்தனர். கம்ப்யூட்டர் மூலம் விளையாட பயிற்சியும் அளித்தனர். பயிற்சியை அடுத்து செஸ் விளையாட நன்கு கற்றுக்கொண்டேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்