இலங்கை போரின் போது விமர்சனத்திற்கு ஆளான கருணாநிதி: கடந்து வந்த அரசியல் தடங்கள் ஒரு பார்வை

Report Print Deepthi Deepthi in இந்தியா

இந்திய அரசியலில் பல்வேறு சாதனைக்கு சொந்தக்காரரான கருணாநிதி திமுக தலைவராக 50வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.

அவர் கடந்து வந்த அரசியல் தடத்தினை பற்றி பார்ப்போம்,

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 யூன் 3-இல் ஏழை இசை வேளாளர் குடும்பத்தில் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி.

கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார்.

அரசியல் பயணம்

கருணாநிதி தன்னுடைய 14 வது வயதில் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு, அரசியலில் ஈடுபடலானார்.

அதன்பின் இந்தி எதிர்ப்பு போரட்டத்தின் மூலம் தன் அரசியல் தீவிரத்தைக் காட்டினார். அவர் வாழ்ந்த திருவாரூர் பகுதியில் இளைஞர்களை " மாணவ நேசன் "என்ற துண்டு கையெழுத்துப் பதிப்புகள் மூலம் ஒன்று திரட்டினார்.

இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்

1957 இல் நடைபெற்ற திமுக இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ் நாட்டில் நடுவண் அரசால் இந்தி திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்டோபர் 13, 1957 அன்றைய நாளை இந்தி எதிர்ப்பு நாளாக பெருந்திரளான மக்களுடன் அமைதியான முறையில் கடைப்பிடிப்பது என முடிவானது.

இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கிய கருணாநிதி நடுவண் அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து இவ்வாறு முழக்கமிட்டார்:

"மொழிப்போராட்டம்.. எங்கள் பண்பாட்டை பாதுகாக்க, இது எமது மக்களின் தன்மானம் மற்றும் எங்களது கட்சியின் அரசியல் கொள்கை.. மேலும்இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு (எடுப்பு சாப்பாடு), ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு” என்று அவர் கூறினார்.
அரசியல் வெற்றிகள்

1957 ஆம் ஆண்டு திமுக தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து கருணாநிதி குளித்தலையில் போட்டியிட்டு வென்று, முதல் முறையாக திமுக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைக்கவும், முதல் முறையாக கருணாநிதி தனது சட்டமன்ற வரலாற்றைத் துவக்கவும் வழிவகுத்தது.

1967 இல் நடைபெற்றத் தேர்தலின் மூலம் திமுக முதல் முறையாக தமிழக ஆட்சியில் பங்குபெற்றது. நாவலர் இரா. நெடுஞ்செழியன் பொதுச் செயலாளராகவும், கருணாநிதி பொருளாளராகவும் கட்சியில் உயர்வு பெற்றனர்.

தி.மு.க.வின் தொடக்க கால உறுப்பினர் கருணாநிதி. அவர், 1957ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்த 40 ஆண்டுகளாக தி.மு.க.வின் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார். தமிழகத்தின் முதல்வராக ஐந்துமுறை கருணாநிதி பதவி வகித்துள்ளார்.

1969–1971 --கா. ந. அண்ணாதுரை மறைவுக்குப் பின் கருணாநிதி முதல் முறையாக தமிழக முதல்வரானார்.

1971-1976—இரண்டாவது முறையாக முதல்வராக ஆட்சி

1989–1991 --எம். ஜி. இராமச்சந்திரன், மறைவுக்குப் பின் மூன்றாம் முறை ஆட்சி

1996-2001—நான்காம் முதல்வராக ஆட்சி

2006-2011—ஐந்தாம் முதல்வராக ஆட்சி

திமுகவின் வளர்ச்சியில் பெரும் பங்கு

கருணாநிதி கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தபோது, திமுக இரண்டு முறை பெரும் பிளவுகளைச் சந்தித்தது. 1972ல் எம்.ஜி.ஆர். தலைமையில் கட்சி பிளவுபட்டு, அ.தி.மு.க. உருவானது.

1993ல் வைகோ தலைமையில் கட்சி பிளவைச் சந்தித்தது. இந்த இரண்டு பிரிவுகளை மீறியும், கட்சி பலவீனமடையாமல் காப்பாற்றி மீண்டும் மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்குக் கொண்டுவந்த பெருமை கருணாநிதியையே சாரும்.

அரசியல் விமர்சனங்கள்

தொடக்க காலத்தில் பாரதிய ஜனதா கட்சியைக் கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது, பொதுமக்களின், குறிப்பாக ஊடகங்களின், விமர்சனத்திற்கு உள்ளானது.

1972 விவசாயிகள் போராட்டத்தில் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள். 1976-ல் மு.கருணாநிதியின் ஆட்சி வீராணம் ஊழல் புகார் இலஞ்சத்தை காரணமாகக் காட்டி கலைக்கப்பட்டு ஆளுனர் ஆட்சிஅமல்படுத்தப்பட்டது.

2ஜி புகார் ஊழலில் திமுக குடும்பமே சிக்கியது. மேலும், இலங்கை போரின்போது முதலமைச்சர் பதவியில் இருந்தும், போரில் தமிழர்கள் கொன்றுகுவிக்கப்பட்டபோது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற விமர்சனம் இவர் மீது எழுந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்