அதிமுக பெண் நிர்வாகி தீக்குளிப்பு? சென்னையில் பரபரப்பு!

Report Print Arbin Arbin in இந்தியா

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததை கண்டித்து அதிமுக மாவட்ட மகளிரணி செயலாளர் ஒருவர் சென்னையில் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளுர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்வக்குமாரி. இவர் திருவள்ளுர் மாவட்ட மகளிரணி செயலாளராக இருந்து வருகிறார். இவர் மாவட்ட கவுன்சிலராகவும் பதவி வகித்து வருகிறார்.

வரும் உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் போட்டியிட கட்சியில் விருப்ப மனு அளித்திருந்தார்.

இந்த நிலையில் தனக்கு சீட்டு மறுக்கப்படுவதாக கூறி செல்வக்குமாரி சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதியில் தங்கியிருந்த திருவள்ளுர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், பொன்னேரி எம்எல்ஏவுமான பலராமன், திருவள்ளுர் எம்பி வேணுகோபால் ஆகியோரை சந்தித்து தனக்கு ஏன் சீட்டு தரவில்லை என்று கேட்டதாக கூறப்படுகிறது.

இதில் இருதரப்புக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து செல்வக்குமாரி தான் எடுத்துச் சென்ற மண்ணெண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

உடனடியாக எம்எல்ஏ விடுதியில் இருந்த ஊழியர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் கொடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்படுள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளன.

முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளில் எவருக்கேனும் அசம்பாவிதங்கள் நடந்தால்,

அது ஜெயலலிதாவின் உடல் நிலையை தொடர்பு படுத்தியே பொதுமக்களால் புரிந்துகொள்ளப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது வீணான வதந்திகளை மேலும் ஊக்கப்படுத்தும் எனவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments