காதல் கணவர் இறந்து விட்டார்! மகனுடன் தற்கொலைக்கு முயன்ற மனைவிக்கு நேர்ந்த சோகம்

Report Print Aravinth in இந்தியா

சென்னையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர் இறந்ததை தாங்க முடியாமல் மன வேதனையுடன் இருந்த மனைவி தனது 4 வயது மகனுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அயனாவரம் பரசுராமன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விஜய் (31). பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வரும் இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன் பத்மபிரியா(28) என்பவரை காதலித்து பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துள்ளனர்.

இவர்களுக்கு தருண் (4) என்ற மகன் உள்ள நிலையில், விஜய் உடல்நிலை சரியில்லாது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனில்லாமல் இறந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, தனது கணவர் இறந்த துயரம் தாங்காமல் பத்மபிரியா நேற்று இரவு முழுவது அழுது கொண்டே இருந்துள்ளார்.

அவரது உறவினர்கள் எவ்வளவோ எடுத்துக்கூறியும் மனவேதனையிலிருந்து மீள முடியாமல், தற்கொலை செய்யும் நோக்கில் காலை 4 மணி அளவில் தனது மகனை தூக்கிக் கொண்டு எண்ணூர் ஆற்றுப் பாலத்திலிருந்து குதித்துள்ளார்.

ஆற்றில் இருவரும் தத்தளித்து கொண்டிருந்ததை பார்த்த அப்பகுதி மீனவர்கள் உடனடியாக ஆற்றில் குதித்து பத்மபிரியாவை மீட்டுள்ளனர்.

ஆனால் அவரது மகன் தருண் நீரில் மூழ்கியதால் மூச்சு திணறி இறந்து விட்டான், எனவே அவனை சடலமாக மீட்டுள்ளனர்.

பின்பு பொலிசாருக்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் பத்மபிரியாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், உயிரிழந்த தருணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கிடையில் சாவு வீட்டிற்கு வந்த உறவினர்கள் காலை எழுந்ததும் பத்மபிரியாவையும், தருணையும் காணாமல் தேட அவர்கள் கையில் பத்மபிரியா எழுதி வைத்துவிட்டு வந்த கடிதமும் பணமும் கிடைத்தது.

அதில், ”என் கணவர் இல்லாத உலகில் நான் வாழ விரும்பவில்லை நான் போகிறேன்” என எழுதப்பட்டிருந்தது.

இதை படித்த அவர்கள் பதறி போன நிலையில், பத்மபிரியா தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும், சிறுவன் தருண் இறந்து விட்டதும் தெரிய வந்துள்ளது.

விஜய் இறந்த சோகத்தில் இருந்த உறவினர்கள் தற்போது இந்த சம்பத்தினால் மிகுந்த சோகத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் இது குறித்து எண்ணூர் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments