சுவாதி கொலை வழக்கு தொடர்பாக ராம்குமாரை வீடியோ படம் எடுத்து சிசிடிவி காட்சிகளுடன் ஒப்பிட்டு பார்க்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த யூன் மாதம் 24ம் திகதி சுவாதி என்ற பெண் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக ராம்குமார் என்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஆனால் ராம்குமார் கொலை செய்யவில்லை, பொலிசார் திட்டமிட்டே உண்மையை மறைக்கின்றனர் என ராம்குமாரின் வழக்கறிஞர் கூறிவருகிறார்.
இதற்கிடையே ராம்குமாரை வீடியோ படம் எடுத்து அதனை சிசிடிவி ஆதாரங்களுடன் ஒப்பிட்டு பார்க்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதற்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், இதனை எதிர்த்து ராம்குமார் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ராம்குமாரை வீடியோ எடுக்க அனுமதி அளித்ததுடன் எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த சில நிபந்தனைகளை ரத்து செய்தது.
ராம்குமாரை வீடியோ, புகைப்படம் மற்றும் உடல் தொடர்பான அளவீடுகள் எடுப்பதற்கு, தேவையான ஏற்பாடுகளை புழல் சிறை-2 கண்காணிப்பாளர் செய்து தரவேண்டும்.
பொலிஸ் புகைப்பட பிரிவில் துணை ஆய்வாளர் தகுதிக்கு குறையாத நபர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க வேண்டும்.
வீடியோ உள்ளிட்டவற்றை எடுத்தவுடன் அவற்றை எழும்பூர் நீதிமனறத்திற்கு அனுப்ப வேண்டும்.
பின்னர் அடுத்தகட்ட ஆய்வுக்காக தடயவியல் துறைக்கும் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.