தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவின் முக்கிய அம்சங்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா
தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவின் முக்கிய அம்சங்கள்

தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதியில் ஜூன்-13 ம் திகதி நடைபெற இருந்த தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தலைமையிலான தேர்தல் ஆணையர்கள் விரிவாக விவாதித்தனர்.

அதன் முடிவில் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவின் முக்கிய அம்சங்கள் வருமாறு

  • மாநிலத்தில் தேர்தல் நடத்தும் பொறுப்பு முழுவதும் தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்கு உள்பட்டது.
  • தேர்தல் நடத்துவதற்கும், தேர்தல் திகதியை தள்ளிவைப்பதற்கும் மாநில ஆளுநரின் அனுமதியைப் பெறத் தேவையில்லை என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
  • தேர்தல் திகதி தொடர்பான பரிந்துரைக் கடிதத்தை தேர்தல் ஆணையத்துக்கு எழுதாமல் மாநில ஆளுநர் தவிர்த்திருக்க வேண்டும்.
  • சட்டப்பேரவையில் எல்லா இடங்களும் நிரப்பப்பட்டால்தான் எம்எல்ஏக்கள், மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிக்க முடியும் என எந்தச் சட்டப் பிரிவும் வலியுறுத்தவில்லை.
  • வாக்காளர்களுக்கு "லஞ்சம்' கொடுத்து வாக்குகளை ஈர்க்க சட்டவிரோதமான செயல்களில் சம்பந்தப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் ஈடுபட்டது அப்பட்டமாக நிரூபணமாகியுள்ளது.
  • இத்தகைய செயலில் ஈடுபட்ட வேட்பாளர்களுக்கு ஓராண்டு சிறையோ, அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனையோ விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.
  • இந்த அம்சங்களைக் கவனத்தில் கொண்டு, இரு தொகுதிகளிலும் உடனடியாகத் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுத்தால், அங்கு நியாயமாகவும் வெளிப்படையாகவும் தேர்தல் நடைபெறாது என்ற முடிவை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.
  • அதன் அடிப்படையில் அரசமைப்புச் சட்டத்தின் 324ஆவது விதி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 15, 30, 153ஆவது பிரிவுகள் ஆகியவற்றின்படி, தேர்தல் ஆணையம் சார்பில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக கடந்த ஏப்ரல் 22-ஆம் திகதியிட்டு வெளியிடப்பட்ட அறிவிக்கையில் இடம் பெற்ற அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கான தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக ஆளுநருக்கு ஆணையம் பரிந்துரை செய்கிறது.
  • இரு தொகுதிகளிலும் தேர்தல் நடத்துவதற்கான திருத்தியமைக்கப்பட்ட அட்டவணையை தேர்தல் ஆணையம் விரைவில் பரிந்துரை செய்யும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments