பழுதாகாமல் ரொம்ப நாள் மிக்ஸி இருக்கணுமா? அப்போ இப்படி வெச்சிக்கோங்க!

Report Print Nalini in வீடு - தோட்டம்

மனிதனுக்கு மட்டும் இல்லை வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் கூட ஆயுள் இருக்கு. வீட்டில் உள்ள பொருட்களை முறையாக பராமரித்தாலே போதும். எல்லா பொருள்களையும் பத்திரமாக நீண்ட நாள்கள் வைத்திருக்கலாம்.

தினமும் வீட்டில் பயன்படுத்தப்படும் மிக்ஸியை பராமரிக்க வேண்டியது அவசியம். தினமும் காலை டிபனுக்கு சட்னி அரைப்பதில் தொடங்கி குழம்புக்கு மசாலா வரை எல்லா நேரங் களிலும் இல்லத்தரசிகளுக்கு கை கொடுப்பது மிக்ஸி மட்டும்தான்.

மிக்ஸி இல்லாமல் இன்றைய இல்லத்தரசிகளால் ஒரு வாரம் கூட இருக்க முடியாது. அந்தளவுக்கு அதன் தேவை இன்று அத்தியாவசியமாகிவிட்டது.

ஒவ்வொரு பொருளையும் வாங்கும் போதும் அதற்கும் ஆயுள் இருக்கிறது. முறையாக பொருட்களை பராமரித்தால் சிறிய பொருளும் கூட நீண்ட நாள்கள் பழுதாகாமல் இருக்கும்.

மிக்ஸியை எப்படி பராமரிப்பது என்பதை பற்றி பார்ப்போம்:

 • காலை முதல் இரவு வரை மிக்ஸியை நாம் அன்றாடம் பயன்படுத்துகிறோம். கரண்ட் பவர் லோ வாக இருக்கும் போது மிக்ஸியை பயன்படுத்தக்கூடாது. பவர் குறைவாக இருக்கும்போது மிக்ஸியை பயன்படுத்தினால் அதன் மோட்டார் சீக்கிரம் பழுதாகிவிடும்.
 • மிக்ஸியை பொருத்தும் போதே மிக்ஸி ஜாரின் அடியில் உள்ள கப்ளர் மிக்ஸியில் நன்றாக பொருந்தி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
 • மிக்ஸியில் எதை அரைத்தாலும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பிறகு அரைத்தால் பிளேடு வீணாகாமல் இருக்கும்.
 • மசாலாக்களை கெட்டியாக அரைத்தால் மிக்ஸியும் பழுதாகி விட வாய்ப்பு அதிகமாக உள்ளது.
 • மிக்ஸியில் அரைக்கும் போது வேகமாக அரைய வேண்டும் என்பதற்காக மூன்றாவது பட்டன் வைத்து வேகமாக அரைக்கக்கூடாது.
 • முதல் மற்றும் இரண்டாவது வேகத்தில் தான் இருக்கும் பட்டனை வைத்து சுற்றினால் போதும்.
 • எந்த ஒரு மசாலாக்கள், சட்னி வகைகள் எதுவாக இருந்தாலும் ஜார் நிரம்பி வழியும் அளவு போடாமல் பாதியளவு மட்டும் சேர்த்து அரைக்க வேண்டும். இதனால் சீக்கிரம் மசிந்து விடும். மேல் அடிக்காமலும், வழியாமலும் இருக்கும்.
 • அதிகம் கரகரப்பாக இருக்க கூடிய பொருளை மிக்ஸியில் போடும் போது எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.
 • பிளேடு கூர்மை குறைந்துவிடும் என்றால் சிறிதளவு கல் உப்பை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி அரைத்து எடுகலாம்.
 • மிக்ஸியை தொடர்ந்து விடாமல் அரைத்துகொண்டே இருந்தால் மிக்ஸி சூடாகிவிடும். அதனால் இடைவெளி விட்டு அரைக்க வேண்டும்.
 • மிக்ஸி ஓடும் போது திறந்துபார்க்க முயற்சிக்கக்கூடது.
 • மிக் ஸியை ஆஃப் செய்யும் போது மிக்ஸியின் பட்டனை மட்டும் அல்லாமல் அதன் பிளக் வெளியே எடுத்துவிடுவது நல்லது.
 • மிக்ஸியை பாத்திரங்களோடு வைத்து கலந்து கழுவ போடக்கூடாது.
 • மிக்ஸியில் எதை அரைத்தாலும் உடனடியாக கழுவி விடுவது நல்லது.
 • இரண்டு வாரத்துக்கு ஒரு முறை அல்லது மாதத்துக்கு ஒரு முறை மிக்ஸி ஜாரின் அடியில் இருக்கும் பகுதியை சோப்பு நீர் கழுவ வேண்டும்.
 • அடிப்பகுதியை சுத்தம் செய்ய பல் துலக்கும் பிரஷ்ஷை பயன்படுத்துவது ஈஸியாக இருக்கும்.
 • ஒவ்வொரு முறை மிக்ஸி பயன்படுத்தும் போதும் அடிப்பாகத்தில் ஈரம் இருந்தால் அதை துடைத்து விட வேண்டும்.
 • மிக்ஸி ஜாரில் அரைக்க வேண்டிய பொருளை சேர்ப்பதற்கு முன்பு ஜாரின் அடிப்புறம் தண்ணீர் இருக்கிறதா, ஈரம் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
 • எதிர்பாராமல் ஜாரை அப்படியே பயன்படுத்தும் போது ஈரக்கசிவு மோட்டாரில் இறங்கி ஷாக் அடிக்க நேரிடும். மிக்ஸியின் மோட்டாரும் பழுதாகிவிட வாய்ப்புள்ளது.
 • மிக்ஸியை தரையில் வைத்து உபயோகிக்க கூடாது. அடுப்பறையின் மேடை மீது வைத்து பயன்படுத்த வேண்டும்.
 • வீட்டில் குழந்தைகள் இருந்தால் மிக்ஸியின் பிளக்கை தனியாக கழட்டி சுற்றி வைத்துவிடுவது நல்லது.
 • மாதம் ஒரு முறை மிக்ஸியை சுத்தமான காட்டன் துணியில் துடைக்க வேண்டும்.
 • சிலர் மிக்ஸியை பளிச்சென்று ஆக்க சோப்பு நீர் கொண்டு மிக்ஸியை கழுவக்கூடாது.
 • மிக்ஸியில் விதவிதமான மாடல்கள் இருந்தாலும் பராமரிப்பு முறைகள் ஒன்றுதான்.
 • ஒவ்வொரு முறை மிக்ஸியை பயன்படுத்தி முடித்ததும் சுத்தமாக துடைத்து எடுத்து விட்டால் காலங்கள் கடந்தும் உங்கள் மிக்ஸி சும்மா மின்னும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்