ஜேர்மனியில் கல்வி கற்கும் சர்வதேச மாணவர்கள் நிதியுதவி பெறுவதற்கான வழிகள்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
0Shares

பெரும்பாலான ஜேர்மன் பல்கலைக்கழகங்களில் கல்வி இலவசம், அல்லது ஒரு சிறு தொகைதான் கல்விக்கட்டணமாக செலுத்தவேண்டியிருக்கும்.

அதே நேரத்தில் வேறு நாடுகளிலிருந்து வரும் மாணவர்களின் அன்றாட தேவைகளுக்கு நிச்சயம் பணம் தேவைப்படும்.

குறிப்பாக, உயர்கல்வி பயிலும் மாணவர்கள், ஏற்கனவே தங்கள் பட்டப்படிப்புக்காக வாங்கிய கடனை அடைக்கவேண்டியிருக்கும் என்பதால், நிச்சயம் அவர்களுக்கு பணம் தேவைப்படும்.

ஜேர்மனியைப் பொருத்தவரை, மாணவர்கள் கல்வி கற்றுக்கொண்டே சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. அவை இங்கே விவரிக்கப்பட்டுள்ளன.

கொரோனா நிதியுதவி

நாட்டில் கொரோனா பிரச்சினை நிலவுவதைத் தொடர்ந்து, சர்வதேச மாணவர்கள் மாதம் ஒன்றிற்கு 650 யூரோக்கள் வரை வட்டியில்லாக் கடன் பெற விண்ணப்பிக்க முடியும்.

பெடரல் பயிற்சி உதவிச் சட்டம்

BAföG என்னும் அரசு உதவித்தொகை ஒன்று கல்வி பயிலும் மாணவர்களுக்கென்றே கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த கடனுக்கு வட்டி கிடையாது. அத்துடன் இந்த திட்டம் ஜேர்மானியர்கள் அல்லாதவர்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஜேர்மனியில் நீண்டகால வாழிட உரிமம் பெற்றவர்கள், பெற்றோரோ துணைவரோ ஜேர்மனியில் வேலை செய்பவர்கள், கல்வியை துவங்குவதற்கு முன்பாக ஐந்து ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்தவர்கள் ஆகியோருக்கும் நிதியுதவி கிடைக்கலாம்.

கடன் உதவி

கல்விக்காக கடன் பெற முடிவு செய்ததுமே, கடன் குறித்து சற்று ஆராய்ந்து, அதிக வட்டியுள்ள கடன்களை தவிர்ப்பது நலம்.

ஜேர்மனியில் மாணவர்களுக்காக அரசால் நிதியுதவி அளிக்கப்படும் மற்றும் அரசு உதவி பெறாத பல்வேறு கடன் திட்டங்கள் உள்ளன.

வெளியே கடன் வாங்குவதற்கு முன், நீங்கள் கல்வி கற்கப்போகும் பல்கலைக்கழகத்திலேயே வெளிநாட்டு மாணவர்களுக்கான கடன் உதவி கிடைக்குமா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

பகுதி நேரப் பணி

உங்கள் கல்வி மீது நீங்கள் கவனம் செலுத்துவது முக்கியம் என்றாலும், அன்றாட செலவுகளுக்காக மாணவர்கள் பலர் பகுதி நேர பணிகளில் ஈடுபடுவது உதவலாம்.

அதிர்ஷ்டவசமாக, ஜேர்மனியில் மாணவர்களின் கல்வி தொடர்பான பணிகளை வழங்கும் அமைப்புகள், மாணவர்களுக்கு பணி வழங்குவது வழக்கமான ஒன்று என்பதையும் தெரிந்துகொள்வது பயனளிக்கும் விடயமாகும்.

ஆனால், மாணவர் ஒருவர் எவ்வளவு நேரம் வேலை செய்யலாம், எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதற்கு கட்டுப்பாடுகள் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்வது நலம்.

கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்)

கல்வி உதவித்தொகை என்பது நிச்சயமான ஒன்று இல்லை என்றாலும், DAAD திட்டம் போன்ற கல்வி உதவித்தொகை உங்கள் கல்விக்கு உதவுவதுடன், உங்கள் CVக்கும் உதவியாக இருக்கும். பல மில்லியன் மாணவர்கள் இந்த திட்டம் மூலம் பலனடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும்போது, அதற்கான விண்ணப்பம் உங்கள் வகுப்புகள் தொடங்குவதற்கு ஓராண்டு முன்பே சமர்ப்பிக்கப்படவேண்டும் என்பதை கவனத்தில் கொள்க.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்