இராணுவ தளம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஜேர்மானியர்கள், நேற்று பிராங்பர்ட் விமான நிலையத்தின் அருகில் விடுவிக்கப்பட்டனர்.
ஆட்கொல்லி கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீன நகரமான வுஹானிலிருந்து ஜேர்மனி திரும்பிய நூற்றுக்கும் மேற்பட்ட ஜேர்மானியர்கள் தாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து விடுவிக்கப்பட்டு தங்கள் குடும்பங்களுடன் சேர்ந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. சீனாவிலிருந்து பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி 20 வெளிநாட்டவர்களுடன் (பெரும்பாலும் சீனர்கள்) பிராங்க்பர்ட் திரும்பிய அவர்கள் அனைவரும், கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிவதற்காக தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் சிலர் சந்தேகத்தின் பேரில் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின், யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளதையடுத்து அவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.