ஜேர்மனியில் வெளிநாட்டு இளம்பெண்ணுக்கு கிடைத்த மோசமான அனுபவம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

அமெரிக்கரான ஒரு இளம்பெண், முதல் முறை ஜேர்மனிக்கு வரும் நிலையில், ரயிலில் மோசமான அனுபவம் ஒன்று அவருக்கு காத்திருந்தது.

நீண்ட விமான பயணத்திற்குப்பின் களைத்துப்போன Ludmila L. பெர்லின் ரயில் ஒன்றில் ஏறியுள்ளார். மூன்று சூட்கேஸ்கள் மற்றும் ஒரு முதுகுப்பையுடன் ரயிலில் அவர் அமர, ரயில் புறப்பட்டுள்ளது.

ரயில் புறப்பட்டதும் அவரை அணுகிய ஒரு பயணச்சீட்டு பரிசோதகர், Ludmila வாங்கிய பயணச்சீட்டை முத்திரையிட்டிருக்க வேண்டும் என்று அவரிடம் தெரிவித்துள்ளார்.

பயணக்களைப்பில் முத்திரையிட மறந்துபோன Ludmilaவை, அடுத்த ரயில் நிலையம் வந்ததும் தன்னை பின் தொடரும்படி கூறியுள்ளார் பயணச்சீட்டு பரிசோதகர்.

தன்னை அழைத்துச் சென்று, பயணச்சீட்டில் முத்திரையிட்டு அவர் அனுப்பி விடுவார் என்ற எண்ணத்தில், தனக்கு அருகில் இருந்த ஒரு பெண்ணிடம் தனது பொருட்களை கொஞ்சம் பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு பயணச்சீட்டு பரிசோதகரை பின் தொடர்ந்து ரயிலை விட்டு இறங்கியிருக்கிறார் Ludmila.

ஆனால் அந்த பயணச்சீட்டு பரிசோதகர் ரயிலிலிருந்து இறங்கிய Ludmilaவிடம், அவர் அபராதம் செலுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.

அந்த பயணச்சீட்டு பரிசோதகர் தனக்கு உதவுவார் என்று நம்பினால், அவரோ Ludmilaவை நிற்க வைத்து விளக்கங்கள் கொடுத்துக்கொண்டிருக்க, என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொண்ட Ludmila, எனது பொருட்கள் ரயிலில் இருக்கின்றன, அவற்றை எடுத்து வந்துவிடுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் அதற்குள் ரயிலின் கதவுகள் மூடப்பட, ரயிலில் அவரது உடைமைகளை வைத்திருந்த பெண், பொறுங்கள் அவரது பைகள் என்னிடம் இருக்கின்றன என்று சத்தமிட்டிருக்கிறார்.

கையில் பாஸ்போர்ட்டை மட்டும் வைத்துக்கொண்டு தனது விலையுயர்ந்த மின்னணு உபகரணங்களுடன் புறப்பட்டுச் செல்லும் ரயிலையே பார்த்துக்கொண்டு கண்ணீரும் கோபமுமாக நின்றிருக்கிறார் அவர்.

Ludmila மட்டுமல்லாமல் பலரும், வெளிநாட்டவர்களிடம் பயணச்சீட்டு பரிசோதகர்கள் நடந்துகொள்ளும் முறை குறித்து ஏற்கனவே புகாரளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கு நின்றிருந்த பயணச்சீட்டு பரிசோதகர்கள் யாரும் தனக்கு உதவ முன்வராத நிலையில், அடுத்த ரயிலில் ஏறிய Ludmilaவுக்கு வேறொரு வகையான அனுபவம் காத்திருந்தது.

கண்ணீருடன் நின்ற அவரது நிலையை அறிந்த முன் பின் தெரியாத பலர், அவருக்கு பணம் கடனாக கொடுக்க முன்வந்ததோடு, தங்கள் மொபைல் போன்களையும் பயன்படுத்திக்கொள்ளும்படி கூறியிருக்கிறார்கள்.

அவர்களில் ஒருவர், 80 வயதுள்ள ஒரு ஓய்வு பெற்ற மருத்துவர், கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் Ludmilaவுடன் அவருக்கு உதவியாக இருந்திருக்கிறார்.

அவர் Ludmilaவுடன் பயணித்து, பொலிஸ் நிலையம் சென்று புகார் ஒன்றை அளித்து விட்டு, Ludmilaவின் புதிய வீட்டுக்கும் அவருடன் சென்று, பின்பு, Friedrichstraße ரயில் நிலையத்திற்கும் அவரை அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு இன்னொரு நபர், முன் பின் தெரியாத ஒருவர், Ludmilaவின் உடைமைகளுடன் அங்கு காத்திருந்து, அவரது உடைமைகளை பத்திரமாக ஒப்படைத்திருக்கிறார்.

இது போதாதென்று அந்த ரயில் நிலையத்திலிருந்த வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி, Ludmilaவுக்கு உதவியாக, அவரை மோசமாக நடத்திய பயணச்சீட்டு பரிசோதகர் மீது புகாரளிக்கச் சொல்ல, ஒரு கெட்ட விடயம் தனக்கு நடந்தது உண்மைதான் என்றாலும், கண்ணீருடன் நின்ற தனக்கு முன் பின் தெரியாத இத்தனை பேர் உதவியதை நம்ப முடியாமல் திகைத்து நின்றிருக்கிறார் Ludmila.

மனிதர்கள் மீதான நம்பிக்கையை புதுப்பித்துக் கொள்ள இந்த சம்பவங்கள் தனக்கு உதவியதாக நெகிழ்கிறார் Ludmila.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்