ஜேர்மனியில் டிரக்கிலிருந்து கவிழ்ந்த மதுபான போத்தல்கள்: சாலையில் ஆறாக ஓடிய மதுபானம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் மதுபான போத்தல்களை சுமந்து சென்ற டிரக் ஒன்றிலிருந்து மதுபானம் அடுக்கி வைத்திருந்த பெட்டிகள் திடீரென சரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அந்த டிரக்கிலிருந்து 10,000 பியர் (beer) போத்தல்கள் சாலையில் கவிழ்ந்ததில் சாலையில் மதுபானம் ஆறாக ஓடியது.

Leutershausen பகுதியில் சென்று கொண்டிருந்த அந்த டிரக்கை, 53 வயதுடைய சாரதி ஒருவர் ஓட்டி வந்துள்ளார்.

திருப்பம் ஒன்றில் வாகனத்தை திருப்பும்போது, அதில் இருந்த மதுபான பெட்டிகள் சரிந்துள்ளன.

அந்த டிரக்கில் 1,280 மதுபான பெட்டிகள் இருந்ததாக தெரியவந்துள்ளது. சாரதி டிரக்கை திருப்பும்போது பெட்டிகளில் சுமார் 40 சதவிகிதம் கீழே சரிந்துள்ளது.

இதனால் அவருக்கு 12,000 யூரோக்கள் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

அந்த பகுதிக்கு அருகில் உள்ள இரண்டு நகரங்களைச் சேர்ந்த தன்னார்வ தீயணைப்பு வீரர்களும், உள்ளூர் பாதுகாப்பு குழுவினரும், போத்தல்களை அகற்றி போக்குவரத்து தொடர உதவியுள்ளனர்.

சாலையை சுத்தம் செய்ய 29 பேர் உழைக்க வேண்டியிருந்தது. ஆறு மணி நேரத்திற்கு சாலை மூடப்பட்டு, அவ்வழியாக வந்த வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன.

மதுபான பெட்டிகளை டிரக்கில் சரியாக பாதுகாத்து வைக்காமல் இருந்ததற்காக பொலிசார் சாரதியை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்