அரசு நிகழ்ச்சியின்போது திடீரென ஜேர்மன் சேன்ஸலரின் உடல் பயங்கரமாக நடுங்கியதால் பரபரப்பு!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனிக்கு உக்ரைனின் புதிய ஜனாதிபதி வருகை தந்திருந்த நிலையில், அவரை வரவேற்கும் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலின் உடல் திடீரென கிடுகிடுவென நடுங்க ஆரம்பித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உக்ரைனின் புதிய ஜனாதிபதியை வரவேற்கும் நிகழ்ச்சியின்போது தேசிய கீதம் ஒலிக்கச் செய்யப்பட்டது.

அப்போது உக்ரைன் ஜனாதிபதிக்கு அருகில் நின்ற ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலின் உடல் திடீரென கிடுகிடுவென நடுங்க ஆரம்பித்தது.

அவர் அருகில் நின்ற உக்ரைன் ஜனாதிபதியும் எந்த உணர்ச்சியும் காட்டாமல் நிற்க, மற்றவர்கள் பதற்றத்துடன் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் தேசிய கீதம் ஒலித்துக் கொண்டிருந்ததால் நின்றிருந்த இடத்திலிருந்து யாரும் அசையவில்லை.

தேசிய கீதம் முடிந்ததும், எதுவுமே நடக்காததுபோல, உக்ரைன் ஜனாதிபதியை அழைத்துக் கொண்டு மரபுப்படி வரவேற்பு நிகழ்ச்சியை தொடர ஆரம்பித்தார் ஏஞ்சலா.

பின்னர் ஊடகவியலாளர்கள் அவரிடம் என்ன ஆயிற்று என விசாரிக்க, அவரோ, ஒன்றுமில்லை, வெப்பத்தால் நீரிழப்பு (Dehydration) ஆகி விட்டது, பிறகு மூன்று கப் தண்ணீர் குடித்தேன், அவ்வளவுதான் எல்லாம் சரியாகிவிட்டது என்று பதற்றமின்றி பதிலளித்தார்.

பின்னர் உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyயிடம் இது குறித்து கேட்ட போது, அவர், ஏஞ்சலா அவர்கள் என் அருகில்தான் நின்றார்கள், அதனால் அவர்கள் மிகவும் பத்திரமாகத்தானே இருப்பார்கள், ஏதாவது அவசியம் ஏற்பட்டிருந்தால் நானே உதவியிருப்பேன் என நகைச்சுவையாக பதிலளித்தார்.

ஏஞ்சலா ஏற்கனவே சில தருணங்களில் இவ்வாறு நடுங்கியதுண்டு எனவும், அவருக்கு ஏதேனும் உடல் நலக் குறைவு உள்ளதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்பட்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்