தனியாக இருப்பவர்கள் முதல் பாலியல் தொழில் செய்பவர்கள் வரை எடுத்ததற்கெல்லாம் வரி விதிக்கும் ஜேர்மனி!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

சமீபத்தில் ஜேர்மனியில் ஒருவரது நாயை பறிமுதல் செய்து அரசு அதிகாரிகள் ஆன்லைனில் விற்ற செய்தியை படித்திருக்கலாம்.

அந்த குறிப்பிட்ட நபர் நாய்க்கு வரி கட்டாததே இந்த பிரச்சினைக்கு காரணமாம். ஆம், ஜேர்மனியில் நாய்க்கு வரி, தனியாக இருப்பவர்களுக்கு வரி, பாலியல் தொழிலாளிகளுக்கு வரி என எடுத்ததற்கெல்லாம் வரி விதிக்கப்படுவதைக் குறித்து அலசுகிறது இந்த செய்தி.

நாய் வரி

ஜேர்மனியில் நாய்களுக்கும் வரி உண்டு, நல்ல வேளையாக அதை நாய் செலுத்த வேண்டியதில்லை, நாயின் உரிமையாளர் செலுத்த வேண்டும்.

நாய்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைப்பதிலிருந்து, அவை சாலையில் அசுத்தம் செய்வதை சுத்தம் செய்வதற்கான செலவு வரை பல காரணங்களுக்காக இந்த வரி வசூலிக்கப்படுகிறது.

அதுவும் கொஞ்சம் நஞ்சமில்லை, கடந்த ஆண்டில் மட்டும் பெர்லினில் மட்டுமே 11 மில்லியன் யூரோக்கள் வசூலாகியிருக்கிறது.

தேவாலய வரி

ஜேர்மனியில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு இதை கேட்பதற்கு கொஞ்சம் வேடிக்கையாகத்தான் இருக்கும், ஆம், இங்கு தேவாலயத்திற்காகவும் அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும்.

லஞ்ச வரி

1999 வரை ஜேர்மனியில் லஞ்சப்பணத்திற்கு வரி கிடையாது என்ற நடைமுறை இருந்தது. நீங்கள் ஏதாவது காரியம் ஆக வேண்டும் என்பதற்காக அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்திருந்தால், எதற்காக லஞ்சம் கொடுத்தீர்கள் என்பது முதல் யாருக்கெல்லாம் லஞ்சம் கொடுத்தீர்கள் என்பது வரையான விவரங்களை அளித்தால் உங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.

புதுப்பிக்கப்படத்தக்க ஆற்றலுக்கான வரி

ஜேர்மனி புதுப்பிக்கப்படத்தக்க ஆற்றலில் உலகத்துக்கே முன்னோடியாக இருக்கிறது, எந்த அளவுக்கென்றால், அண்டை நாடுகளுக்கு ஆற்றலை விற்கும் அளவிற்கு.

இதற்காக ஒரு பெரும் தொகையை முதலீடாக செலவிட வேண்டியுள்ளதால், அதற்காக உப கட்டணங்களும் வரிகளும் நுகர்வோருக்கு விதிக்கப்படுகின்றன.

தனியாக வாழ்வோருக்கு வரி

இந்த வரி உண்மையில் குழந்தைகளுடன் தொடர்புடையது. அதாவது ஜேர்மனியின் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், குழந்தைகள் வைத்திருப்போருக்கான செலவுகளை சந்திக்கும் வகையிலும் இந்த வரி விதிக்கப்படுகிறது.

அதாவது குழந்தைகள் உடையவர்களுக்கு இந்த வரிக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

பாலியல் தொழிலாளிகளுக்கான வரி

ஜேர்மனியில் பாலியல் தொழில் சட்டப்பூர்வமானது. மற்ற பணி செய்பவர்களைப் போலவே பாலியல் தொழில் செய்பவர்களுக்கும் வரி செலுத்துவதற்கான அடையாள எண்கள் கொடுக்கப்பட்டுள்ளதோடு, அவர்களும் கட்டாயம் வரி செலுத்த வேண்டும்.

இந்த வரியை வசூலிப்பது கடினம் என்பதால், சிவப்பு விளக்கு பகுதிகளில் ஒரு இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது, அதில் பாலியல் தொழிலாளிகள் தினமும் 6 யூரோக்கள் செலுத்த வேண்டும்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்