நாஸிக்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதை ஜேர்மனி நிறுத்த வற்புறுத்தல்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

தங்கள் நாட்டில் வாழும் நாஸிக்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என பெல்ஜியம் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜேர்மனியை வற்புறுத்தியுள்ளனர்.

தங்கள் நாட்டில் வாழும் இரண்டாம் உலகப்போருடன் தொடர்புடைய நாஸிக்கள் சிலருக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள பெல்ஜியம் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதை ஜேர்மனி நிறுத்த வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர்.

பெல்ஜியம் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த மக்களுக்கு ஜேர்மனி அரசு ஓய்வூதியம் வழங்குவதை நிறுத்த தங்கள் நாடு வற்புறுத்த வேண்டும் என கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரலாற்றிலேயே மிக கொடூரமான கொலைகளை செய்த படை ஒன்றுடன் தொடர்புடையவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகளுக்கு எதிரானது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மன் ராணுவத்துடன் இணைந்து போரிட தாமாக முன் வந்தவர்கள் மற்றும் கட்டாயமாக போரிட நிர்ப்பந்திக்கப்பட்டவர்களுமாகிய பெல்ஜியம் நாட்டில் வசிக்கும் சிலருக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் அனுப்பப்பட்டு வருகிறது.

இரண்டாம் உலகப்போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் 1951ஆம் ஆண்டின் ஜேர்மன் சட்டம் ஒன்றின்படி இந்த ஓய்வூதியங்கள் வழங்கப்படுகின்றன.

2019 பிப்ரவரி கணக்கின்படி பெல்ஜியத்தில் வாழும் 18 பேருக்கு இந்த ஓய்வூதியங்கள் வழங்கப்பட்டு வருவதாக ஜேர்மன் தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.

ஓய்வூதியம் பெறுவோர் யாரும், அராஜகங்களில் ஈடுபட்ட Waffen-SS அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் அல்ல என்று அது உறுதிபடத் தெரிவித்துள்ளது.

அவர்கள் பெல்ஜியம் நாட்டவர்களாக கூட இருக்கலாம், உதாரணமாக பெல்ஜியத்தில் குடியமர்ந்த ஜேர்மன் குடிமக்களாக அவர்கள் இருக்கலாம் என ஜேர்மன் தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.

ஆனால் ஓய்வூதியம் பெறுவோர் அதற்கு தகுதியுடையவர்கள்தானா என்பதை உறுதி செய்யும்படி கோரியுள்ள பெல்ஜியம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இது தொடர்பாக தேவையான தகவல்கள் அனைத்தையும் ஜேர்மனியிலிருந்து பெல்ஜியம் அரசு பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், விசாரணை மேற்கொண்டு இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers