ஜேர்மன் இளைஞரை நாடு கடத்திய எகிப்து: தீவிரவாதியா என விசாரணை

Report Print Balamanuvelan in ஜேர்மனி

எகிப்தில் கைது செய்யப்பட்டு, ஜேர்மனிக்கு நாடு கடத்தப்பட்ட ஜேர்மன் நாட்டவர் ஒருவர், தீவிரவாதியா என விசாரித்து வருவதாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எகிப்திய பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ள செய்திகளின் அடிப்படையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Göttingen நகரைச் சேர்ந்த அந்த 23 வயது இளைஞர், 18 வயதுடைய இளைஞர் ஒருவருடன் கைது செய்யப்பட்டார்.

அந்த 18 வயது இளைஞர் இன்னும் காவலில்தான் உள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரின் குடும்பத்தாரும், அவர்கள் இருவரும் தவறுதலாக கைது செய்யப்பட்டுள்ளதாக நம்புகின்றனர்.

ஆனால், அந்த 23 வயது இளைஞர் பொலிசாரால் இஸ்லாமியவாதி என சந்தேகிக்கப்படுபவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர், பொலிசாரால் ஜேர்மனிக்கு எதிராக வன்முறைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதற்காக தேடப்படும் ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் எகிப்தின் வடக்கு சீனாய் பகுதியில் காணப்படும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு ஒன்றில் சேருவதற்காக முயற்சி செய்து கொண்டிருந்ததாக ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில், கெய்ரோ சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

எகிப்திய சட்டத்தின்படி, அவர் குற்றம் எதுவும் செய்யாததால் அவரை ஜேர்மனிக்கு நாடு கடத்த எகிப்திய அதிகாரிகள் முடிவு செய்தனர்.

ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவிக்க ஜேர்மன் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்