11 பேர் உயிரைக் காத்த இளம்பெண்: ஜேர்மனியில் நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

கார்பன் மோனாக்சைடு நச்சுப்புகை தாக்கத்திலிருந்து இளம் பெண் ஒருவர் 11 பேரை புத்தி சாதுரியமாக காப்பாற்றிய சம்பவம் ஜேர்மனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mönchengladbach பகுதியில் பார்பிக்யூ செய்து உண்டு மகிழ்ந்த ஒரு குடும்பத்தினர், வீட்டில் வெப்பமாக்கும் கருவி வேலை செய்யாததால் பார்பிக்யூ அடுப்பை வீட்டுக்குள் கொண்டு வந்து வைத்திருந்தனர்.

பின்னர் நான்கு குழந்தைகள் உட்பட அனைவரும் உறங்கச் சென்றுவிட அடுப்பிலிருந்து நச்சுப்புகை உருவாக ஆரம்பித்தது.

அதிர்ஷ்டவசமாக அந்த வீட்டு உரிமையாளரின் 15 வயது மகள் சீக்கிரமாக எழுந்ததால் நிகழவிருந்த பேராபத்து தவிர்க்கப்பட்டது.

வீடு முழுவதும் புகை சூழ்ந்திருப்பதைக் கண்ட அந்த பெண் அனைவரையும் அவசரமாக எழுப்பினாள்.

எல்லோரும் தலை சுற்றல், தலைவலி மற்றும் மயக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டதும் பக்கத்து வீட்டுக்கு ஓடிச் சென்ற அவள் அங்குள்ளவர்களிடம் நடந்ததைக்கூற, அவர்கள் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்புத்துறையினர் உடனடியாக தீயணைப்பு வாகனங்களை அனுப்பியதோடு, ஏராளமானோர் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து இரண்டு மீட்புக்குழு ஹெலிகொப்டர்களையும் அனுப்பினர்.

அவர்கள் வீட்டுக்குள் நுழைய முற்பட்டபோது அந்த வீட்டுக்குள் இருந்த கார்பன் மோனாக்சைடின் அளவு மிக அதிகம் என்பதால், பாதுகாப்பு முகமூடிகளை அணிந்தே அவர்களால் உள்ளே செல்ல முடிந்தது.

உடனடியாக வீட்டிலுள்ள அனைவரும் வெளியேற்றப்பட்டார்கள்.

பலர் ஹெலிகொப்டர்கள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டதோடு, சிலர் ஆக்சிஜன் சேம்பர்களுக்குள் வைக்கப்பட்டார்கள்.

பார்பிக்யூ அடுப்பை வீட்டுக்குள் கொண்டு வந்த நபர் மீது கவனக்குறைவால் மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியதற்காக கிரிமினல் குற்றச்சாட்டுகள் பாயலாம்.

தனது புத்தி சாதுரியத்தால் 11 பேரைக் காப்பாற்றிய அந்த பெண்ணை தீயணைப்புத்துறையினர் உட்பட பலரும் பாராட்டியுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்