ஜேர்மனியில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி: தட்டிக் கேட்க ஆளில்லை

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஒரு பெண் சேன்ஸலராக இருக்கும் ஜேர்மனியில், அரசுப் பணிகளில் உயர் பதவியில் இருப்போர் பெரும்பாலும் ஆண்கள்.

ஆண் பெண் பாகுபாடு கூடாது என சட்டம் இயற்றப்பட்ட நிலையிலும் பலர் இந்த அநீதிக்கு எதிராக குரல் எழுப்பிய நிலையிலும் அந்தக் குரல்கள் இன்னும் விழ வேண்டியவர்கள் காதில் விழவில்லை.

ஜேர்மனியின் பிரபல பத்திரிகை ஒன்று வெளியிட்ட ஆய்வு முடிவு ஒன்று, ஜேர்மனியில் காணப்படும் பாலினப் பாகுபாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

1949 முதல் ஜேர்மனியில் secretary of state என்னும் உயர் பதவியை வகித்த 692 பேரில் வெறும் 3 சதவிகிதத்தினர் மட்டும் பெண்கள்.

அந்த பதவிக்காக 668 ஆண்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் 24 முறை ஒரு பெண் பரிந்துரைக்கப்பட்டார்.

இந்தப் பெரிய பதவியில் பெண்கள் அமர்ந்தபோதிலும் அவர்கள் அந்த பதவியிலிருந்து அகற்றப்பட்டார்கள்.

அதாவது 1949ஆம் ஆண்டிலிருந்து 19 பெண்கள் மட்டுமே அந்த பதவியில் இருந்துள்ளார்கள்.

17 ஆண்டுகளுக்கு முன் பாலின சமத்துவச் சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டபோதும் பெரும்பாலான துறைகளில் ஆண்கள்தான் அதிகமிருக்கிறார்கள்.

சமீபத்தில் உள்துறை அமைச்சரான Seehoferன் துறை இணையதளம் ஒன்றில் அவருடன் எட்டு ஆண் state secretaries நிற்கும் ஒரு புகைப்படம் வெளியானபோது, அதில் ஒரு பெண் கூட இல்லாததைக் கண்ட பலர் சமூக ஊடகங்களில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தனர். உடனடியாக அந்த புகைப்படம் அகற்றப்பட்டது.

ஃபெடரல் பாலின சமத்துவ சட்ட நிபுணரான Torsten von Roetteken கூறும்போது, அரசின் சமத்துவக் கொள்கை ஒரு பித்தலாட்ட வேலை என்றார்.

பெண்களின் சமத்துவத்திற்காக அரசு எல்லா நடவடிகைகளையும் எடுப்பதாக மக்கள் நம்பவைக்கப்படுகிறார்கள், ஆனால் அதில் உண்மை இல்லை என்கிறார் அவர்.

சமீபத்தில் பொறுப்பான பதவிகளில் பெண்களின் விகிதாச்சாரம் அதிகரிக்கவில்லை என்பதை விமர்சித்து 180 மூத்த சிவில் பணியாளர்கள் கையெழுத்திட்ட எதிர்ப்புக் கடிதம் ஒன்று, பொருளாதார விவகாரங்கள் மற்றும் ஆற்றல் துறைக்கான அமைச்சரான Peter Altmaierஇடம் அளிக்கப்பட்டது.

சில துறைகளில் ஆண்கள் மட்டுமே state secretaries என்னும் பொறுப்பில் இருப்பதாக குற்றம் சாட்டி சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கலுக்கும் ஒரு கோபக்கடிதம் அனுப்பப்பட்டது.

என்றாலும் இன்றுவரையில் எந்த மாற்றமும் நடக்கவில்லை என்பதுதான் கசப்பான நிஜம்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers