அது சட்டவிரோதமா? வீதியில் குவிந்த ஆயிரக்கணக்கானோர்: கலவர பூமியான பாரிஸ் நகரம்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
490Shares

பிரான்சில் பொலிசாருக்கு அதிக அதிகாரங்கள் அளிக்கும் சட்டத்தை எதிர்த்து, தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்களால் பாரிஸ் நகரம் கலவர பூமியாக மாறியுள்ளது. இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த பொலிசார் தடியடியும் கண்ணீர் புகைவீச்சும் நடத்தியுள்ளனர்.

ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு கருப்பின இசை தயாரிப்பாளரான மைக்கேல் ஜெக்லர் என்பவரை அடித்து துன்புறுத்திய நான்கு பொலிசார் தற்போது குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவமும் பொதுமக்களின் கொந்தளிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.

மேலும், காவல்துறையினருக்கு ஆதரவாக இயற்றப்பட்ட இந்த Sécurité Globale எனும் புதிய சட்டத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

காவல்துறை அதிகாரிகள் எங்களை பாதுகாப்பார்கள் என இனிமேலும் நம்ப முடியாது என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

பொலிஸ் மிருகத்தனத்தைப் பற்றி புகாரளிக்க ஊடகவியலாளர்களின் உரிமையைத் தடுப்பதாகக் கருதப்படும் வரைவுச் சட்டம் குறித்த கோபத்தையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பிரதிபலித்துள்ளனர்.

இந்த மசோதாவால் சில சூழ்நிலைகளில் பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களை பரப்புவது ஒரு குற்றமாக கருதப்படும், இது பத்திரிகை சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் என்று பொது சமூகத்தினர் கூறுகின்றனர்.

ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களில் பெரும்பான்மையானவர்கள் அமைதியாக அணிவகுத்துச் சென்றனர்,

ஆனால் கருப்பு உடையில், முகமூடி அணிந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் சிறிய குழுக்கள் கடையின் ஜன்னல்களை உடைத்து இரண்டு கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு ஓட்டலுக்கு தீ வைத்தனர்.

பிரான்ஸ் உள்விவகார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, பாரிஸில் 46,000 எதிர்ப்பாளர்களைக் கணக்கிட்டதாக தெரிவித்துள்ளது. அவர்களில் ஒன்பது வன்முறையாளர்களை கைது செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பல ஆர்ப்பாட்டக்காரர்கள் "காவல்துறையிலிருந்து எங்களை யார் பாதுகாப்பார்கள்", "பொலிஸ் வன்முறையை நிறுத்துங்கள்" போன்ற முழக்கங்களுடன் பலகைகளை எடுத்துச் சென்றனர்.

ஜெக்லர் தாக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களிலும் பிரெஞ்சு மற்றும் வெளிநாட்டு பத்திரிகைகளிலும் பரவலாக பரப்பப்பட்டுள்ளன.

ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், கருப்பினத்தவர் தாக்கப்படும் அந்த புகைப்படங்கள் பிரான்சுக்கு அவமானம் என்று வெள்ளிக்கிழமை கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்