பிரான்சில் நடந்த துயர சம்பவம்! 13 நிமிடங்கள் கருப்பினத்தவரை பொலிசார் அடித்து நொறுக்கும் வீடியோ காட்சி

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் கருப்பினத்தவர் ஒருவரை பொலிசார் முரட்டுத்தனமாக தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகி கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வெளியாகியுள்ள அந்த 13 நிமிட வீடியோவில், பொலிசார் அந்த கருப்பினத்தவரை அடித்து நொறுக்குவதைக் காண முடிகிறது.

அந்த நபர் பெயர் Michel Zecler, அவர் ஒரு இசை தயாரிப்பாளர். அவர் மாஸ்க் அணியாமல் சென்றதற்காக அவரை பொலிசார் தாக்கியதாக கூறப்படுகிறது.

தன்னைத் தாக்கும்போது பொலிசார் இனரீதியாக தன்னை விமர்சித்ததாகவும் Zecler புகாரளித்துள்ளார்.

முதலில், Zecler கைது செய்வதற்கு மறுப்பு தெரிவித்ததாக கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்ட நிலையில், பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டுகள் விலக்கிக்கொள்ளப்பட்டு, அதற்கு பதிலாக அவரை தாக்கிய பொலிசார் மீது விசாரணை துவக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், கருப்பினத்தவரான இசை தயாரிப்பாளர் ஒருவரை பொலிசார் அடித்து நொறுக்கும் வீடியோவை தான் பார்த்ததாகவும், அது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும், அவமானம் என்றும் கூறியுள்ளார்.

பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையில் நம்பிக்கையை மீண்டும் உருவாக்க அரசு உடனடி நடவடிக்கையில் இறங்கவேண்டும் என்று கூறியுள்ள மேக்ரான், பிரான்சில் வெறுப்போ இனவெறியோ தழைக்க அனுமதிக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், Zeclerஐத் தாக்கிய பொலிசார் மூவர் அடையாளம் காணப்பட்டு, பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், அவர்கள் மீது விசாரணை துவக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Gérald Darmanin, அந்த பொலிசார் மூவரும் நாட்டின் சீருடையை களங்கப்படுத்திவிட்டதாகவும், அவர்களை பணிநீக்கம் செய்ய தான் அழுத்தம் கொடுக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

பாரீஸ் மேயர் முதல், பிரான்ஸ் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர்கள் வரை பலரும் இந்த சம்பவத்துக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர்.

bbc

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்