பிரெஞ்சு குடியுரிமை மறுக்கப்பட்ட நர்ஸ்: வெளியான பின்னணியால் சர்ச்சை!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் கடினமாக உழைத்ததற்காக நர்ஸாக பணிபுரியும் ஒரு பெண்ணுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சட்ட சிக்கல் கருதி பெயர் மற்றும் எந்த நாட்டவர் என்ற விவரங்கள் வெளியிடப்படாத ஒரு பெண், குடியுரிமை கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், அவர் பணி நேரம் தொடர்பில் சட்டத்தை மீறியதாக அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அந்த பெண் மூன்று இடங்களில் வேலை செய்கிறார்.

வாரத்திற்கு 59 மணி நேரம், மாதத்திற்கு 271 மணி நேரம் அவர் வேலை செய்கிறார், பிரான்சைப் பொருத்தவரையில், இது விதிமீறல் என பிரெஞ்சு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரான்ஸ் அரசைப் பொருத்தவரை, அவர் அதிகபட்சமாக வாரத்திற்கு 48 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும்.

பிரான்ஸ் மருத்துவமனைகளில் ஓவர்டைம் செய்வது மிகவும் சாதாரணம் என்பதால், இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ட்விட்டரில் பயனர்கள் கடும் விமர்சனங்களை செய்து வருகிறார்கள். மருத்துவ ஊழியர்கள் யூனியன் ஒன்றின் தலைவர் ஒருவர், நாம் அதிகம் உழைப்பதற்காக ஒரு நர்ஸுக்கு குடியுரிமையை மறுக்கிறோமா?, இவ்வளவு கீழ்த்தரமாகவா நடந்து கொள்வது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

நான், பல மருத்துவர்களையும் நர்ஸ்களையும் போலவே வாரத்திற்கு 60 முதல் 70 மணி நேரம் வேலை செய்கிறேன், என்னுடைய குடியுரிமையையும் பறித்துக் கொள்வார்களா என கேள்வி எழுப்புகிறார் அவர்.

என்றாலும், இந்த நடவடிக்கை வழக்கத்திற்கு மாறானது அல்ல என்கிறார் இத்தகைய வழக்குகளில் அனுபவம் வாய்ந்தவரான வழக்கறிஞர் Sanjay Navy.

தற்போது அந்த நர்ஸ், தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உள்துறை அமைச்சகத்தில் மேல் முறையீடு செய்ய இருக்கிறார். உள்துறை அமைச்சகம் பதிலளிக்க நான்கு மாதங்கள் வரை எடுத்துக் கொள்ளும். உள்துறை அமைச்சகம் நல்ல ஒரு முடிவை அளிக்காவிட்டால், அவர் Nantes நிர்வாக நீதிமன்றத்தை நாட வேண்டும்.

ஆனால் இந்த மேல் முறையீட்டு வழக்குக்கு தீர்ப்பு வர, இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்