வெளிநாட்டில் இருந்து மனைவி மற்றும் 9 பிள்ளைகளுடன் நாடுகடத்தப்பட்ட பிரான்ஸ் நாட்டவர்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
351Shares

துருக்கியில் கைதான ஐ.எஸ் ஆதரவு நபர், அவரது 2 மனைவிகள் மற்றும் 9 பிள்ளைகளை அந்த நாட்டு அரசு பிரான்சுக்கு நாடு கடத்தியுள்ளது.

சிரியாவில் இருந்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அனாதை குழந்தைகள் 12 பேரை சில தினங்களுக்கு முன்னர் திருப்பி அனுப்பிய நிலையிலேயே, தற்போது 2 பெண்கள் மற்றும் 9 குழந்தைகள் உள்ளிட்ட குடும்பம் ஒன்றை துருக்கி அரசு நாடு கடத்தியுள்ளது.

பிரான்சில் வந்து சேர்ந்த 35 வயது நபர் மற்றும் அவரது 9 பிள்ளைகளின் இரு தாயார்கள் உள்ளிட்டவர்களை பொலிசார் விமான நிலையத்தில் வைத்தே கைது செய்துள்ளனர்.

துருக்கியில் உள்ள தடுப்பு மையம் ஒன்றில் காவலில் வைக்கப்பட்டிருந்த இவர்களை விசாரணைக்கு பின்னர் அந்த நாடு பிரான்சுக்கு திருப்பி அனுப்பியிருந்தது.

பிரான்சில் இருந்து அந்த 35 வயது நபர் சிரியாவுக்கு செல்லும் போது ஒரு மனைவி மற்றும் பிள்ளைகள் இருந்ததாகவும், ஆனால் சிரியாவுக்கு சென்ற பின்னர் இன்னொரு திருமணம் செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

இதுவரை பிரான்ஸ் நாட்டுக்கு திரும்பிய ஐ.எஸ் ஆதரவாளர்களின் எண்ணிக்கை 277 என உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இதில் பெரும்பாலும் துருக்கியில் உள்ள தடுப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டு, விசாரணைக்கு பின்னர் நாடுகடத்தப்பட்டவர்கள் என கூறப்படுகிறது.

மட்டுமின்றி ஈராக்கில் 11 பிரான்ஸ் நாட்டவர்கள் மரண தண்டனையை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் இருந்து சிரியா மற்றும் ஈராக் நாடுகளுக்கு சென்ற ஜீகாதிகளின் குடும்பத்தாரை அந்தந்த நாடுகள் திரும்ப அழைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்