தனது பணியாளர்களை துன்புறுத்தியதாக பிரான்ஸ் சூப்பர் மார்க்கெட் ஒன்றின் உரிமையாளர் மீது சென்ற புதன்கிழமை புகாரளிக்கப்பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கிழக்கு பிரான்சிலுள்ள Leclerc சூப்பர் மார்க்கெட் என்னும் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் உயர் பொறுப்பிலிருப்போர் தங்களிடம் வேலை செய்வோரை மனிதாபிமானமற்ற வகையில் நடத்துவதாக புகாரளிக்கப்பட்டது.
அந்த நிறுவனத்தில் பணி செய்த 25 ஊழியர்கள் துன்புறுத்தப்பட்டதாக புகாரளிக்கப்பட்டது.
மனோரீதியாக ஊழியர்களை துன்புறுத்தியதாக நிறுவனத்தின் நிதி நிர்வாக இயக்குநர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த அந்த நிறுவன உரிமையாளர் பிணமாக கிடந்ததாக உள்ளூர் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த நிறுவன உரிமையாளர்கள் பணியாளர்களை நடத்திய விதத்தால் அவர்கள் உடல் நலக்குறைவு ஏற்பட, அவர்கள் வேலை செய்ய தகுதியற்றவர்கள் என்று கூறி அவர்களை வேலையை விட்டு நீக்கிய சம்பவங்களும் நடந்துள்ளன.
வேலையை விட்டு நீக்கப்பட்ட 14 பணியாளர்கள் பொலிசாரிடம் புகாரளித்ததையடுத்து, இந்த விடயம் வெளி உலகுக்கு தெரியவந்தது.
விசாரணையில், ஒன்பது ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க அளவில் பணியாளர்களுக்கு தினமும் உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல் கொடுக்கப்பட்டது தெரியவந்தது.
கர்ப்பிணிப்பெண்களும், உடற்குறைபாடு கொண்டவர்களும் கனமான பொருட்களை தூக்குவது உட்பட பல கடினமான வேலைகள் செய்ய வற்புறுத்தப்பட்டுள்ளார்கள்.
அப்படி பணியாளர்களை சித்திரவதை செய்ததாக சென்ற புதன்கிழமை கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடப்பட்ட நிறுவன உரிமையாளர்களில் 58 வயதுடைய ஒருவர்தான் இப்போது மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அவரது மரணம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.