எத்தியோப்பிய விமான விபத்து: கருப்புப் பெட்டி ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது என்ன?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமானத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட கருப்புப்பெட்டி, ஆய்வுக்காக பிரான்சின் விமான பாதுகாப்பு விசாரணை ஏஜன்ஸியிடம் கடந்த வியாழனன்று ஒப்படைக்கப்பட்டது.

வெள்ளியன்று, பிரான்சின் விமான பாதுகாப்பு விசாரணை அமைப்புடன், விபத்து குறித்து விசாரித்து வரும் எத்தியோப்பிய குழு ஒன்றும் இணைந்து கருப்பு பெட்டி மீதான ஆய்வுகள் தொடங்கியதாக, எத்தியோப்பிய விமான நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

வெளியாகியுள்ள புகைப்படங்களிலிருந்து, அந்த கருப்பு பெட்டியின் தரவு பதிவு செய்யும் அமைப்பு முழுமையாக இருப்பதாக காட்சியளிக்கும் நிலையில், விமானிகளுக்குள் நடக்கும் உரையாடல்கள் மற்றும் விமானிகளுக்கும் விமான கட்டுப்பாட்டு அறையில் இருப்போருக்கும் இடையில் நிகழும் உரையாடல்களை பதிவு செய்யும் பகுதி, ஒரு பக்கம் சேதமடைந்துள்ளதைக் காண முடிகிறது. மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முழு விவரங்களும் வெளியிடப்படாத நிலையில், ஒரே ஒரு தகவல் மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அது என்னவென்றால், எத்தியோப்பிய விமான விபத்திற்கும், அக்டோபர் மாதம் விபத்துக்குள்ளான Lion விமான விபத்துக்கும், தெளிவான ஒற்றுமைகள் இருப்பதாக கருப்புப் பெட்டி தரவுகளிலிருந்து தெரியவந்துள்ளதுதான்.

எத்தியோப்பிய போக்குவரத்து துறை அமைச்சர் Dagmawit Moges நேற்று இந்த தகவலை வெளியிட்டார்.

Dagmawit Moges கூறும்போது, கடந்த வாரம் விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமான விபத்திற்கும் அக்டோபரில் விபத்துக்குள்ளான Lion விமான விபத்துக்கும் தெளிவான ஒற்றுமைகள் உள்ளன என்றார்.

அத்துடன், இது குறித்து விசாரணையின்போது தொடர்ந்து ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரான்சின் விமான பாதுகாப்பு விசாரணை அமைப்பும் அமெரிக்க மற்றும் எத்தியோப்பிய விசாரணை அதிகாரிகளும் இணைந்து எத்தியோப்பிய விமானம் விபத்துக்குள்ளான காரணத்தை அறியும் ஆய்வில் ஈடுபட்டுள்ள நிலையில், முழுமையான முடிவுகள் வெளியாக பல நாட்கள் ஆகும் என்று தெரியவந்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்