இல்-து-பிரான்சில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு பாதி விலையில் பயண அட்டை! மாகாண முதல்வர் அறிவிப்பு

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் இல்-து-பிரான்ஸ் மாகாணத்தில் வசிக்கும் 65 வயதுக்கும் மேற்பட்டோருக்கு, மாதாந்திர பயண அட்டை பாதி விலையில் வழங்கப்பட உள்ளதாக மாகாண முதல்வர் அறிவித்துள்ளார்.

இல்-து-பிரான்ஸ் மாகாணத்தில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எந்த உரிமைகளும், சலுகைகளும் வழங்கப்படவில்லை என அம்மாகாண முதல்வர் Valerie Pecresse நேற்று தெரிவித்தார்.

அதன் பின்னர், அங்கு வசிக்கும் 65 வயதை தாண்டிய முதியவர்களின் மாதாந்திர நவிகோ அட்டையில் 50 சதவித விலைக்கழிவு வழங்கப்பட உள்ளதாகவும், இதனால் 1,20,000 பேர் நன்மை அடைவார்கள் என்றும் அவர் அறிவித்தார்.

மேலும் இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘65 வயதுக்கு மேற்பட்டவர்கள் இன்னமும் வரி செலுத்திக்கொண்டு தான் உள்ளனர். அவர்கள் பொது போக்குவரத்து என்று ஒன்றையே மறந்துவிட்டனர்.

இந்த பட்டியலில் அவர்களின் வருமானத்தை பொருட்படுத்தாமல் அனைவருக்குமான திட்டமாக இது இருக்கும்’ என தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த திட்டத்திற்கு வருடத்திற்கு 40 மில்லியன் யூரோக்கள் செலவாகும் என்றும், இவ்வருட இறுதி முதல் இந்த வசதி நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்