பிரான்ஸ் ஜனாதிபதியை சந்திக்க வேண்டும்: கையெறி குண்டுடன் போராட்டம் நடத்தும் நபரால் பரபரப்பு

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், கையெறிகுண்டுடன், ஒரு நபர் மேற்கு பிரான்ஸ் நகரான Angersஇல் போராட்டம் நடத்தி வருவதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாரீஸில் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்கள் அணிந்திருக்கும் மஞ்சள் ஜாக்கெட்டைப் போலவே உடை உடுத்தியிருக்கும் அந்த நபர், Angers நகரில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திற்கருகில் கிரனேட் என்னும் கையெறிகுண்டை வெடிக்கச் செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாக உள்துறை அமைச்சர் Christophe Castaner தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய Castaner, கையெறிகுண்டு ஒன்றைக் காட்டிய அந்த நபர், இன்னும் பல வெடிபொருட்களை வைத்திருப்பதாகவும், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை பார்க்க வேண்டும் என கோரியதாகவும் தெரிவித்தார்.

அந்த பகுதியைச் சுற்றியிருக்கும் இடங்களிலுள்ள மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட நபர், போதைபொருட்கள் தொடர்பான குற்றப்பின்னணி கொண்டவர் என்று தெரியவந்துள்ளதாக பிரபல தொலைகாட்சி ஒன்று செய்தி வெளியிட்டது.

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக மஞ்சள் ஜாக்கெட்கள் அணிந்து வாகன ஓட்டிகள் நடத்தும் போராட்டங்களால் பிரான்சே முடங்கிப் போயுள்ளது.

இந்நிலையில் மஞ்சள் ஜாக்கெட் அணிந்து ஜனாதிபதியைப் பார்க்கவேண்டும் என கோரும் நபரும் அந்த போராட்டங்களுடன் தொடர்புடையவரா என்பது தெரியவில்லை.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்