பிரான்சில் ஆம்புலன்ஸ் நிறுவனங்கள் நவீன போராட்டம்: போக்குவரத்து ஸ்தம்பிப்பு

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் ஆம்புலன்ஸ் நிறுவனங்கள் நடத்திய நவீன போராட்டத்தால் பாரீஸ் நகரமே ஸ்தம்பித்தது.

நூற்றுக்கணக்கான ஆம்புலன்ஸ் வாகனங்கள் தங்கள் சைரன்களை ஒலிக்க விட்டவாறே சாலைகளில் வழக்கத்திற்கு மாறாக மிக மெதுவாக ஊர்ந்து சென்றதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

நேற்று காலை போக்குவரத்து அதிகம் இருக்கும் நேரத்திற்கு முன்பே சுமார் 500 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பாரீஸில் கூடின.

நோயாளிகள் தங்கள் ஆம்புலன்சை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக, மருத்துவமனைகளே அவற்றை தேர்ந்தெடுக்கலாம் என்னும் புதிய விதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் நேற்று நடத்தப்பட்டது.

சுமார் 2000 ஆம்புலன்ஸ் போராட்டத்தில் பங்கு பெறக்கூடும் என எதிர்பார்ப்பதாக பத்திரிகைகள் தெரிவித்திருந்தன.

உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கே Ile-de-France பகுதியில் 400 கிலோமீற்றர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்களில் விளக்குகளை எரியவிட்டபடியும், சைரனை ஒலிக்க விட்டபடியும் மிக மெதுவாக நகர்ந்து செல்லும் ஆம்புலன்ஸ்களை காண முடிகிறது.

பல ஆம்புலன்ஸ்களின் கண்ணாடிகளில் சர்ச்சைக்குரிய மாற்றங்களுக்கு எதிரான சுலோகங்கள் எழுதப்பட்டிருந்தன.

சில இடங்களில் மருத்துவ உதவிக்குழுவினர் தங்கள் வாகனங்களில் இருந்து இறங்கி, கைகளில் பதாகைகளை ஏந்தியவண்ணம் சாலைகளில் நடந்து சென்றனர்.

சாலைகளில் தடுப்புகளை அகற்றுவதற்காக பொலிசாரும் களத்தில் இறங்கினர்.

மாலை 4 மணி வரை இந்த போராட்டத்தை தொடர்ந்து, பின்னர் சுகாதார அமைச்சகம் முன்பு கூடுவது மருத்துவ உதவிக்குழுவினரின் திட்டம்.

நோயாளிகளுக்கு பதிலாக மருத்துவமனைகளே ஆம்புலன்ஸ்களை தேர்ந்தெடுத்தால் சிறு நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்றும், தங்களால் அந்த பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட முடியாது என்றும், இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் மருத்துவ உதவிக்குழுவினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்