பொலிசாரை தாக்க அழைப்பு விடுத்த இளைஞர்: பிரான்சில் வன்முறையில் முடிந்த கொண்டாட்டம்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பொலிசாரை தாக்க வேண்டும் என ஒரு இளைஞர் சமூக ஊடகங்களில் அழைப்பு விடுத்திருந்த நிலையில், பிரான்சில் ஹாலோவீன் கொண்டாட்டங்கள் வன்முறையில் முடிந்தன.

இந்த வாரத்தின் துவக்கத்தில் இளைஞர் ஒருவர் ஹாலோவீனை முன்னிட்டு பிரான்சின் பிரபல சமூக ஊடகம் ஒன்றில் பொலிசாரைக் களையெடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்.

’The Purge’ என்னும் பிரபல திரைப்படம் ஒன்றில் ஆண்டுக்கு ஒரு முறை எந்த வன்முறையிலும் ஈடுபடலாம் என அரசு அனுமதியளிப்பது போன்ற கதைக்கரு அமைக்கப்பட்டிருந்தது.

அந்த படத்தைப் போலவே நாமும் பிரான்சில் தாக்குதல் நடத்த வேண்டும், அதுவும் பொலிசார் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என அந்த இளைஞர் சமூக ஊடகங்களில் அழைப்பு விடுத்திருந்தார்.

உடனடியாக பொலிசார் அவரைக் கைது செய்தபோது, விளையாட்டுக்காக செய்ததாக அவர் கூறினார். ஆனால் எல்லோரும் அதை விளையாட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15,000 பொலிசார் பிரான்ஸ் முழுவதும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.

எதிர்பார்த்ததுபோலவே நூற்றுக்கும் மேற்பட்ட கலவரக்காரர்கள் பொலிசாரையும் பொதுமக்களையும் தொந்தரவு செய்ததற்காகவும், கடைகளின் கண்ணாடிகளை உடைத்ததற்காகவும், குப்பைத் தொட்டிகளை தீவைத்து கொளுத்தியதற்காகவும் கைது செய்யப்பட்டனர்.

கலவர தடுப்பு பொலிசார் பாரீஸிலும் Lyon நகரிலும் கலவரத்தைக் கட்டுப்படுத்த கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர்.

அதேபோல பாரீஸின் Seine-Saint-Denis பகுதியிலும் ஸ்போர்ட்ஸ்வேர் கடை ஒன்று சூறையாடப்பட்டது, மளிகைக்கடை ஒன்றை சிலர் கொள்ளையடித்தனர், பொலிசார் மீது அமிலம் வீசப்பட்டது.

இவ்வளவு பிரச்சினைகளையும் தூண்டும் வகையில் செய்திகளை பரப்பிய அந்த இளைஞர்மீதுநவம்பர் மாதம் 28ஆம் திகதி விசாரணை நடத்தப்பட உள்ளது.

நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய உள்துறை அமைச்சரான Christophe Castaner, purge என்பது வேடிக்கை விளையாட்டு அல்ல, அது ஒரு அச்சுறுத்தல் என்று கூறினார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்