பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக மாறி வரும் பிரான்ஸ்: சாட்சியங்கள்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

கலைக்கும் கலாச்சாரத்திற்கும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக பிரசித்தி பெற்ற பிரான்ஸ், சமீபத்தில் நடைபெற்றுள்ள சில துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக மாறி வருவதாகத் தோன்றுகிறது.

சமீபத்தில் இளம்பெண் ஒருவர் பொது இடத்தில் தாக்கப்பட்டு அந்த பிரச்சினை நாடாளுமன்றம் வரை வெடித்த நிலையில் விரைவில் இத்தகைய அத்துமீறல்களுக்கு எதிராக சட்டமியற்றப்பட உள்ளதாக பிரான்ஸ் நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பல பெண்கள் தங்கள் மோசமான அனுபவங்களை வெளியிடத் தொடங்கியுள்ளனர்.

அவற்றைக் கேட்கும்போது, பிரான்ஸ், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக மாறி வருவது தெளிவாகவே தெரிகிறது.

பொது இடங்களில், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் அதுவும் ரயில்களில் தங்கள் உடல் பாகங்கள் தொடப்படுவதையும், தொடர்ந்து தவறான உறவுக்கு அழைக்கப்பட்டு நச்சரிக்கப்படுவதையும், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதையும் பல பெண்கள் வெளியே சொல்ல முன்வந்துள்ளனர்.

கூட்டமான ரயிலில் தன் பின்னால் நின்ற ஒரு மனிதன் தன்னிடம் எவ்வாறு தகாத முறையில் நடந்து கொண்டான் என்பதை அச்சத்துடன் விவரிக்கிறார் ஒரு பெண்.

தனது உடல் பாகங்கள் அழகாக இருப்பதாக கூறி அதை வைத்து தன்னை பட்டப்பெயரிட்டு ஆண்கள் அழைப்பதையும் அவை ஆபாசமான உள்ளர்த்தத்தோடு அழைக்கப்படுவதால் அவற்றை பாராட்டாக எடுத்துக் கொள்ள இயலவில்லை என்றும் ஒருவர் வருத்தத்துடன் கூறுகிறார்.

ஒரு பெண் தன் தோழி ஒருத்தியை ரயிலில் ஒருவன் பாலுறவுக்கு அழைத்ததாகவும் அவள் மறுத்ததால் அவளை அவளது வீடு வரை பின் தொடர்ந்ததாகவும் கூறுகிறார்.

பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவோம் என்று அஞ்சியே தாங்கள் ஸ்கர்ட்களுக்கு பதிலாக ட்ரௌசர்களை அணிவதாக பிரான்சில் இரண்டு பெண்களில் ஒருவர் கூறியிருப்பது பிரான்ஸ் எவ்வளவு மோசமாக மாறி விட்டிருக்கிறது என்பதற்கு சரியான உதாரணமாகும்.

இப்படிப்பட்ட நிலையில் அரசு கொண்டு வந்துள்ள சட்டம் மிகப் பொருத்தமானதுதான் என்றாலும் அது எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் பெண்களுக்கு சந்தேகம் தீர்ந்தபாடில்லை.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்