கோடீஸ்வரியாக மாறிய பேசும், கேட்கும் திறனை இழந்த 31 வயது தமிழ்ப்பெண்! சைகை மொழியில் நடந்தது குறித்து விளக்கம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பேசும், கேட்கும் திறனை இழந்த இளம்பெண் கோடீஸ்வரியாக மாறியுள்ளார்.

தனியார் தமிழ் தொலைக்காட்சியில் ‘கோடீஸ்வரி’ என்ற நிகழ்ச்சி, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இது ‘கே.பி.சி. எனப்படும் கோன் பனேங்கா குரோர்பதி’ (நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி) வகையிலான விளையாட்டு நிகழ்ச்சி.

இதில் கேட்கப்படும் 15 கேள்விகளுக்கு சரியான பதில் அளிப்பதன் மூலம், ஒரு கோடி ரூபாய் வரை வெல்லமுடியும். இத்தகைய விளையாட்டு நிகழ்ச்சிகள், உலகின் பல நாடுகளில் நடத்தப்படுவது வழக்கம்.

பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியை ராதிகா சரத்குமார் வழி நடத்தி, தொகுத்து வழங்குகிறார்.

அந்த வகையில் மாற்றுத்திறனாளி ஒருவர், முதன்முதலாக இந்நிகழ்ச்சியின் மூலம் கோடீஸ்வரி ஆகியிருக்கிறார். அவரது பெயர் கவுசல்யா கார்த்திகா (31). மதுரையை சேர்ந்த இவர், காது கேட்கும் திறனை இழந்தவர். வாய் பேச முடியாதவர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி நிறுவனங்களின் மூலம் படித்து, எம்.எஸ்.சி. மற்றும் எம்.பி.ஏ. முடித்தவர். தற்போது மதுரை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஜூனியர் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் இந்நிகழ்ச்சியின் மூலம் கோடீஸ்வரியாக மாறியிருக்கிறார்.

இதுபற்றி கவுசல்யா சைகை மொழியில் கூறும்போது, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை பெருமையாக கருதுகிறேன். மாற்றுத்திறனாளியான நான், இறுதி கட்டம் வரை சென்று, ஒரு கோடி ரூபாயை வெல்வேன் என்று நினைத்து பார்க்கவில்லை.

இந்த பணத்தில் சிறு தொகையை, நாகர்கோவிலில் நான் படித்த சிறப்பு பள்ளிக்கு வழங்க விரும்புகிறேன். குடும்பத்தோடு சுவிட்சர்லாந்து செல்லும் திட்டமும் இருக்கிறது.

மேலும், குரூப்-1 தேர்வு எழுதி, துணை கலெக்டர் ஆகவேண்டும் என்பது எனது லட்சியம் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...