அரசை விமர்சிப்பவரை தேசவிரோதி என்று முத்திரை குத்துவதை ஏற்க முடியாது! பாரதிராஜா

Report Print Kabilan in பொழுதுபோக்கு

இயக்குநர் மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீது தேசவிரோத வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு இயக்குநர் பாரதிராஜா வருத்தம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னம், அனுராக் காஷ்யப், நடிகை ரேவதி உட்பட 49 பேர் பிரதமருக்கு கடிதம் எழுதினர்.

அதில் முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் பிற சிறுபான்மையினரைக் கொல்வதை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஜெய் ஸ்ரீ ராம் ஒரு ஆத்திரமூட்டும் போர் முழக்கமாக பயன்படுத்தப்பட்டதாகவும், கருத்து வேறுபாடு இல்லாமல் ஜனநாயகம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, மணிரத்னம் உட்பட பிரதமருக்கு கடிதம் எழுதிய 49 பேர் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜாவும் இதுதொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘அரசை விமர்சிப்பதால் ஒருவரை தேச விரோதி, நகர்ப்புற நக்சல் என முத்திரை குத்துவதை ஏற்க முடியாது. கடிதம் எழுதியதற்காக தேச விரோத வழக்குப்பதிவு செய்வதை ஏற்க முடியாது.

கலைஞர்கள் தங்கள் கருத்துக்களை திரைப்படங்கள் மூலமாகவே பதிவு செய்ய வேண்டும். பொதுவெளியில் பேசக்கூடாது என்று அச்சுறுத்துவது சரியல்ல.

மாற்று கருத்துடையவர்களை பொய் வழக்குகள் மூலம் மவுனமாக்க முயல்வது ஏற்கத்தக்கது அல்ல. 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்