சர்ச்சையை ஏற்படுத்திய சிவகார்த்திகேயனின் வாக்களிப்பு.. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி புதிய தகவல்!

Report Print Kabilan in பொழுதுபோக்கு

விதியை மீறி சிவகார்த்திகேயன் வாக்களித்திருந்தாலும், அவரது வாக்கும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 18ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவியின் ஓட்டு, வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இருந்தது.

ஆனால், சிவகார்த்திகேயனின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் அவர் வாக்களிக்க முடியாமல் போனது. இதற்கிடையில் தனது வாக்கினை பதிவு செய்துவிட்டதாக சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத நிலையில் சிவகார்த்திகேயன் எப்படி வாக்களித்தார் என்று பலரும் கேள்வியை எழுப்பியதால் சர்ச்சையானது. அதன் பின்னர், அவரிடம் கைரேகை மற்றும் கையெழுத்து பெற்றுக்கொண்டு, மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியில் பாகம் 303 வாக்காளர் பட்டியல் வரிசை எண் 703யில் அவரின் பெயர் எழுதப்பட்டு வாக்களித்துள்ளார்.

நீக்கப்பட்ட பெயர் பட்டியலில், சிவகார்த்திகேயன் பெயர் இருந்ததால் இந்தச் சிறப்பு சலுகை அளிக்கப்பட்டது என தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். எனினும், சிவகார்த்திகேயன் வாக்களித்த விவகாரத்தில் அனுமதி அளித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில், அவர் புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘விதியை மீறி சிவகார்த்திகேயன் வாக்களித்திருந்தாலும், அவரது வாக்கும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்’ என தெரிவித்துள்ளார்.

அதேபோல் நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்தது போல் வீடியோ உள்ளதால், அவர் வாக்களித்தாரா? இல்லையா? என்பது குறித்து தெளிவுபடுத்தும்படி அறிக்கை கேட்கப்பட்டுள்ளது எனவும் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers