இசைஞானி இளையராஜா ஏன் வீடியோவில் அப்படி பேசினார் தெரியுமா? இசையமைப்பாளர் தீனா உருக்கம்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் ராயல்டி கோரிக்கையால் பல குடும்பங்கள் வாழும் என்று தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும், இசையமைப்பாளருமான தீனா கூறியுள்ளார்.

இளையராஜா கடந்த சில தினங்களுக்கு முன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், எனது பாடல்களை பாடுவதற்கு முன்பு, என்னிடம் முன் அனுமதி பெற்று, அதற்குரிய விஷயங்கள் அனைத்தையும் முறைப்படி செய்துவிட்டு, அதன் பின் பாடுவதுதான் முறையானதாகும்.

இல்லையென்றால் சட்டப்படி குற்றமாகும். என்னிடம் முன் அனுமதி பெறாமல் பாடுகிறவர்களோ, இசை குழுவில் வாசிக்கிறவர்களோ அப்படிச் செய்வது தவறு என்பதை நீங்கள் உணர வேண்டும். அதை மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுவரை ஐ.பி.ஆர்.எஸ்-யில் நான் உறுப்பினராக இருந்தேன். நான் இப்போது ஐ.பி.ஆர்.எஸ்-யில் உறுப்பினராக இல்லாத காரணத்தால், இதுவரை என் சார்பாக வசூலித்து கொண்டிருந்த ராயல்டி தொகையை நமது தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்துக்கு அந்த உரிமையை நான் வழங்கியிருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும், இசையமைப்பாளருமான தீனா கூறுகையில், ஒரு மனிதன் தான் சம்பாதித்த சொத்துகளை தானம் செய்யலாம்.

ஆனால் இளையராஜாவோ தன் புக்தியால் வந்த பொருளை தானம் செய்துள்ளார். எங்க சங்கத்தில் 1000-க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.

தனக்குக் கிடைக்கிற காப்புரிமையை எல்லோருக்கும் பிரித்து கொடுத்து சமமா நடத்த நினைத்திருக்கிறார்.

ஒரு பாடலுக்கான ராயல்டியை இசையமைப்பாளர், பாடியவர், எழுதியவர், வெளியிட்டவர்கள்னு சிலர் மட்டுமே எடுத்து கொள்வார்களே தவிர யாரும் தன்னுடன் பணிபுரிந்த இசைக் கலைஞர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று நினைக்கமாட்டார்கள்.

உலகிலேயே முதல்முறையா ராஜா செய்திருக்கிறார்.

ராயல்டி விஷயத்தைப் பொறுத்தவரை, இளையராஜா உள்பட பெரும்பாலான இசையமைப்பாளர்கள் IPRS (Indian performing right society) என்ற அமைப்பைத்தான் நம்பி இருந்தார்கள்.

இந்த அமைப்பில், இந்தி, தமிழ் சினிமாவைச் சேர்ந்தவர்கள் இருந்தனர். இந்த அமைப்பு, உறுப்பினர்களாக இருக்கும் இசையமைப்பாளர்களின் பாடல்களை யார் யார் எங்கெங்கு ஒலி/ஒளிபரப்பு செய்றாங்கனு கண்காணிக்க வேண்டும்.

ஆனால், பாலிவுட் சினிமாவைத் துல்லியமாகக் கண்காணித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு நியாயமான காப்புரிமைத் தொகையைப் இந்த அமைப்பு பெற்றுத் தரும்.

தமிழ்சினிமாவை இந்த அமைப்பு மிகவும் மோசமாக நடத்தியது. இதன் காரணமாகவே அந்த அமைப்பின் சேர்மேன் ஜாவேத் அக்தருடன் கருத்து மோதல் ஏற்பட்டு இந்த அமைப்பில் இருந்து இளையராஜா வெளியேறினார்.

இதில் எந்த ஒரு தப்பும் இல்லை, இளையராஜாவின் இந்த முடிவால் பல குடும்பங்கள் வாழும். ஆனால் அவர் கேட்ட ராய்ல்டி தொகையை சிலர் தவறாக புரிந்து கொண்டு மீம்ஸ் போட்டு கலாய்த்தனர், இனிமேலாவது அதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள் என்று வேதனையுடன் கூறி முடித்துள்ளார்.


மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers