தன்னை கிண்டல் செய்த ரசிகருக்கு குணமாக பதிலளித்த நடிகர் பிரசன்னா: குவியும் திரையுலக வாழ்த்துக்கள்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

நடிகர் பிரசன்னா தன்னை கிண்டல் செய்து டுவிட் போட்டவருக்கு, பொறுமையாக பதிலளித்ததை பலரும் பாராட்டி வருகின்றனர்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொள்ள உள்ளார். இதற்கான Promo வீடியோ வெளியானது.

அதனைப் பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள், முன்பு பிரசன்னா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நிகழ்ச்சியை சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கியதை குறிப்பிட்டு மீம்ஸ் உருவாக்கி கிண்டல் செய்தனர்.

அத்துடன் சீனிவாசன் என்பவர், பிரசன்னாவிற்கு தொகுப்பாளராக அவ்வளவு திறமை இல்லை என்றும் அவரை அதிகம் வெற்றிகளை பெறாத சுமாரான நடிகர் என்றும் பிரசன்னாவின் ட்விட்டர் கணக்கை குறிப்பிட்டு தெரிவித்தார். இதனைப் பார்த்த நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் சீனிவாசனின் பெயரை குறிப்பிட்டு பதில் அளித்தார்.

அதில் அவர் கூறுகையில், ‘அன்புள்ள சீனி, நான் தொகுத்து வழங்குவது போரடிக்கிறது என்றால், அபடியே இருக்கட்டும். அதை நான் முழுநேர வேலையாக செய்யப் போவதில்லை. நான் சுமாரான நடிகர் என்றால், என்னை மேம்படுத்திக்கொள்ள இடமிருக்கிறது.

நான் அதிக வெற்றிகளைப் பார்க்கவில்லை என்றால், வெற்றிபெற இன்னும் அவகாசம் உள்ளது. வெற்றியைச் சம்பாதிக்க ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரம் தேவைப்படும். வெறுப்பை/அன்பை சம்பாதிக்க ஒரு நொடி போதும். ஒருநாள் நான் உங்கள் அன்பையும் பெறுவேன்’ என தெரிவித்தார்.

பிரசன்னாவின் இந்த ட்வீட்டைப் பார்த்த திரையுலக பிரபலங்கள், யாருடைய மனதையும் புண்படாதவாறு அழகாக பதிலளித்துள்ளீர்கள் என தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர். இந்த விடயம் சமூக வலைதளங்களில் டிரெண்டானது.

இந்நிலையில் தனக்கு இது ஆச்சரியத்தை தருவதாகவும், ஒரு சிறிய விடயத்தை செய்ததற்காக எவ்வளவு அன்பை பெற்றிருக்கிறேன் என்றும் நெகிழ்ச்சியுடன் பிரசன்னா பதிலளித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்