4000 மாணவர்கள் முன்னிலையில் வரலாற்றுச் சாதனை மாணவர்கள் கௌரவிப்பு!

Report Print V.T.Sahadevarajah in கல்வி

அண்மையில் வெளியான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் தேசிய ரீதியில் வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது.

அதனையொட்டி ஏனைய மாணவர்கள் முன் தேசிய மாவட்ட சாதனை மாணவர்கள் பொன்னாடை போர்க்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்கள். இந்நிகழ்வு இன்று நடைபெற்றது. இது ஏனைய 4000 மாணவர்களுக்கு ஊக்குவிப்பாகவும் முன்மாதிரியாகவும் அமைந்தது.

இதில் 9 மாணவர்கள் வைத்திய துறைக்கும், 4 மாணவர்கள் பொறியியல் துறைக்கும், 4 மாணவர்கள் உயிர் முறைமைத் தொழில் நுட்பத் துறைக்கும், 6 மாணவர்கள் பொறியியல் தொழில் நுட்பத் துறைக்கும், 6 மாணவர்கள் வர்த்தகத் துறைக்கும், 5 மாணவர்கள் கலைத் துறைக்கும் தெரிவு செய்யப்பட இருக்கின்றனர்.

இதில் மாவட்ட மட்டத்தில் கணிதப்பிரிவு, உயிர் முறைமைத் தொழில் நுட்பப் பிரிவு, பொறியியல் தொழில் நுட்பப் பிரிவு ஆகியவற்றில் 1ஆம் இடத்தையும், தேசிய ரீதியில் உயிர் முறைமைத் தொழில் நுட்ப பிரிவில் இரண்டாமிடத்தையும், மாணவர்கள் தட்டிக் கொண்டது இப்பாடசாலையின் மிகப் பெரிய வெற்றியாகும்.

அகில இலங்கை ரீதியில் உயிரியில் தொழில்நுட்பத்துறையில் தேசிய ரீதியில் 2ஆம் இடத்தைப் பெற்ற சம்மாந்துறை முஸ்லிம் தேசிய கல்லூரி மாணவன் மொகைடீன் பாவா றிசா மொகமட் ஆவார்.

றிசா மொகமட் உயிரியில் தொழில்நுட்பத்துறையில் 3ஏ பெற்று 2.91 இசட் புள்ளியைப்பெற்று தேசிய ரீதியில் 2ஆம் இடத்தையும் அம்பாறை மாவட்டத்தில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் படி கணிதத்துறையில், அம்பாறை மாவட்டத்தில் முதலிடத்தை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய(தேசிய)கல்லூரி மாணவன் மொகமட் சலீம் ஹினாஸ் அகமட் 3ஏ பெற்றுச்சாதனை படைத்துள்ளார். இவர் 2.13 இசட்புள்ளியைப் பெற்று மாவட்டத்தில் முதலிடத்திலும் தேசிய ரீதியில் 228 வது நிலையிலுமுள்ளார்.

பொறியியல் தொழினுட்பத்துறையில் அப்துல் கபூர் மொகமட் அஸ்பாக் 2ஏ பி பெற்று மாவட்டத்தில் முதலாமிடத்தில் உள்ளார். தேசிய நிலையில் 135வது இடத்திலுள்ளார்.

இம்மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் முத்து இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது. இதில் சம்மாந்துறை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் பிரதம அதிதியாகவும் திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபிர் சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers