ஆப்கானிஸ்தானிடமும் படுதோல்வி..! ஆசியா கோப்பையிலிருந்து வெளியேறியது இலங்கை அணி

Report Print Basu in கிரிக்கெட்

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் வளர்ந்துவரும் அணிகளுக்கான ஆசியா கோப்பை 2019 தொடரிலிருந்து முன்னாள் சாம்பியனான இலங்கை அணி வெளியேறியது.

வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையேயான ஆசியா கோப்பை கடந்த நவம்பர் 14ம் திகதி வங்கதேசத்தில் தொடங்கியது. இதில், ஆசியா வளர்ந்துவரும் அணிகளான வங்கதேசம், இந்தியா, இலங்கை, நேபால், ஹாங்காங், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஓமான் ஆகிய 8 நாடுகள் பங்கேற்றன.

8 அணிகள் ‘ஏ’ மற்றும் ‘பி’ என இரண்டு குழுவாக பிரிக்கப்பட்டு குரூப் சுற்று நடைபெற்றது.குரூப் சுற்றில் ஓமான் மற்றும் பாகிஸ்தான் என முதல் இரண்டு போட்டியிலும் தோல்வியை தழுவிய இலங்கை வளர்ந்துவரும் அணி, நேற்று தனது கடைசி குரூப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதியது.

கட்டாய வெற்றிப்பெற வேண்டிய நெருக்கடியில் இருந்த இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 49வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை 238 ஓட்டங்கள் எடுத்தது.

இலங்கை தரப்பில் அணித்தலைவர் சரித் அசலங்கா 100, காமின்டு மெண்டிஸ் 63, மினோட் பானுகா 42 ஓட்டங்கள் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் அஸ்மத்துல்லா ஒமர்ஸாய், அப்துல் வாசி நூரி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

239 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய ஆப்கான் அணி, 44வது ஓவரில் 3 விக்கெட் இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டி அசத்தல் வெற்றிப்பெற்றது. ஆப்கான் ஆரம்ப துடுப்பாட்டகாரர் ஷாஹிடுல்லா கமல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்கள் எடுத்தார்.

twitter

குரூப் சுற்றில் ஒரு போட்டியில் கூட வெற்றிப்பெறாத முன்னாள் சாம்பியன் இலங்கை அணி, வளர்ந்துவரும் அணிகளுக்கான ஆசியா கோப்பை 2019 தொடரிலிருந்து வெளியேறியது.

நாளை நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தான் வளர்ந்துவரும் அணியும்-இந்தியா வளர்ந்துவரும் அணியும் மோதவுள்ளன. நாளை மறுநாள் நடக்கும் 2வது அரையிறுதிப்போட்டியில் வங்கதேம்-ஆப்கானிஸ்தான் மோதுகின்றன.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்