தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியம்!

Report Print Kabilan in கிரிக்கெட்

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் மன்னிப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக, இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி வீரரும், விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக், மேற்கிந்திய தீவுகளில் நடந்து வரும் கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியின் சில ஆட்டங்களை பார்க்க அங்கு சென்றார். அப்போது அந்த அணியின் சீருடையுடன் அவர்களின் ஓய்வறையில் தினேஷ் கார்த்திக் இருக்கும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது.

இதற்கு காரணம், ஐ.பி.எல் தவிர வேறு எந்த தனியார் லீக் கிரிக்கெட் போட்டி தொடர்களிலும், அது தொடர்பான நிகழ்வுகளிலும் வீரர்கள் கலந்துகொள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்திருந்தது தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் இருக்கும் தினேஷ் கார்த்திக், முறையான அனுமதி பெறாமல் சென்றுள்ளார்.

எனவே, அவருடனான ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து விதிமுறையை மீறி நடந்து கொண்டதற்காக மன்னிப்பு கேட்டு, கிரிக்கெட் வாரியத்திற்கு விளக்க கடிதம் ஒன்றை தினேஷ் கார்த்திக் அனுப்பினார்.

இந்நிலையில், தினேஷ் கார்த்திக்கின் மன்னிப்பு ஏற்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வாரியம் தரப்பில் கூறுகையில், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதால் தினேஷ் கார்த்திக் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படமாட்டாது. இந்த பிரச்னை இத்துடன் முடித்து கொள்ளப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினேஷ் கார்த்திக் காண சென்ற டிரின்பகோ அணி, நடிகர் ஷாருக்கானின் அணியாகும். அத்துடன் அவரை ஐ.பி.எல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸின் தலைவராக தினேஷ் கார்த்திக் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...