பயிற்சி ஆட்டத்தில் இலங்கையை புரட்டியெடுத்த நியூசிலாந்து!

Report Print Kabilan in கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான டி20 பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் செப்டம்பர் 1ஆம் திகதி தொடங்குகிறது. இந்த தொடருக்கு முன்பாக பயிற்சி ஆட்டம் இன்று நடந்தது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கப்தில் 22 ஓட்டங்களும், முன்ரே 48 ஓட்டங்களும் எடுத்தனர். பின்னர் வந்த வீரர்கள் சொதப்பிய நிலையில், ராஸ் டெய்லர் அதிரடியாக 24 பந்துகளில் 4 சிக்சர்களுடன் 41 ஓட்டங்கள் விளாசினார்.

நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ஓட்டங்கள் குவித்தது. இலங்கை தரப்பில் ஹசரங்க 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 37 ஓட்டங்களுக்கு அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

எனினும் ஷெஹன் ஜெயசூரியா 26 ஓட்டங்களும், ஷனகா 25 ஓட்டங்களும் எடுத்தனர். ஆனால் பின்னர் வந்த வீரர்கள் சொதப்பினர். இதனால் 20 ஓவர்கள் ஆடிய இலங்கை அணி, 9 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

நியூசிலாந்து தரப்பில் சோதி 3 விக்கெட்டுகளும், ஸ்காட் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி, பல்லெகெலேவில் 1ஆம் திகதி நடக்க உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்