அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி

Report Print Raju Raju in கிரிக்கெட்

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டிஎன்பிஎல் இறுதிப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.

தமிழ்நாடு பிரிமீயர் லீக்கின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிராக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நாணய சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 126 ஓட்டங்கள் எடுத்தது. அதிக பட்சமாக சசிதேவ் 44 ஓட்டங்களும், முருகன் அஸ்வின் 28 ஓட்டங்களும், கவுசிக் காந்தி 22 ஓட்டங்களும் எடுத்தனர்.

பின்னர் 127 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி துடுப்பாட்டத்தை தொடங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஹரி நிஷாந்தும், ஜெகதீசனும் ஆடினர். ஆரம்பமே திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

நிஷாந்த் 4 ஓட்டங்களிலும், ஜெகதீசன் (0) சதுர்வேத் (0) ஓட்டம் எதுவும் எடுக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பின்னர் களம் வந்த சுமந்த் ஜெயினும், மோகன் அபினவும் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இருவரும் நேர்த்தியாக ஆடி ஓட்டங்கள் சேர்த்தனர். சுமந்த் ஜெயின் 46 ஓட்டங்கள் எடுத்த நிலையில் இருக்கும்போது அலெக்சாண்டர் வீசிய ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அதன் பின் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் விக்கெட்டை பறிகொடுத்ததால் திண்டுக்கல் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 114 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்து. இதனால் சேப்பாக் சூப்பர் கீல்லீஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சேப்பாக் சூப்பர் கீல்லீஸ் அணி தரப்பில் அதிக பட்சமாக பெரியசாமி 5 விக்கெட்டும், அலெக்சாண்டர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers