அவுஸ்திரேலியாவுக்கு ஆட்டம் காட்டிய இங்கிலாந்து! தடுமாறும் வார்னர்

Report Print Kabilan in கிரிக்கெட்

பர்மிங்காமில் நடந்து வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்டில், இங்கிலாந்து அணி 374 ஓட்டங்கள் குவித்துள்ளது.

அவுஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 284 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 267 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பர்ன்ஸ் 125 ஓட்டங்களுடனும், ஸ்டோக்ஸ் 38 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று தொடங்கிய 3ஆம் நாள் ஆட்டத்தில், அரைசதம் அடித்த பென் ஸ்டோக்ஸ் 50 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, பர்ன்ஸ் 133 ஓட்டங்களில் லையன் பந்துவீச்சில் அவுட் ஆனார். பின்னர் வந்த பேர்ஸ்டோக்ஸ், மொயீன் அலி ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் அடுத்தடுத்து வெளியேறினர்.

எனினும், ஸ்டூவர்ட் பிராட் தனது பங்குக்கு 29 ஓட்டங்கள் எடுத்தார். அதேபோல் கிறிஸ் வோக்ஸ் 37 எடுத்து களத்தில் இருந்தார். ஆண்டர்சன் ஆட்டமிழந்ததும் இங்கிலாந்து அணி 374 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அவுஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ், லையன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், பாட்டின்சன் மற்றும் சிடில் இருவரும் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அதன் பின்னர் அவுஸ்திரேலியா 2வது இன்னிங்சை தொடங்கியது. பான்கிராப்ட் (7), வார்னர் (8) ஆகியோர் விரைவிலேயே வெளியேறினர். அடுத்து வந்த கவாஜா 40 ஓட்டங்கள் எடுத்து ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் அவுட் ஆனார்.

இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் நிதானமாக விளையாடி வருகின்றனர். 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 124 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 46 ஓட்டங்களுடனும், ஹெட் 21 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். இதுவரை அவுஸ்திரேலியா 34 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கிறது.

PA

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்