மிரட்டிய மேற்கிந்திய தீவுகள் அணி: திக்கி திணறி வெற்றி பெற்ற இந்திய அணி

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய முதல் 20 ஓவர் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தெரிவு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்களான ஜான் கேம்ப்பெல் மற்றும் இவின் லீவிஸ் டக் அவுட்டாகி வெளியேறினர்.

அதற்கு பின் நிகோலஸ் பூரன்(20), ஹெட்மயர் ரன் எதுவும் எடுக்காமலும், ரோவ்மன் பவெல் 4 ஓட்டங்களிலும், கார்லஸ் பிராத்வெய்ட்( 9 ), சுனில் நரின்( 2 ), கீமோ பால் 3 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

மறுமுனையில் சற்று பொறுப்புடன் ஆடிய பொல்லார்ட் 49 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ஓட்டங்களை மட்டும் எடுத்துள்ளது.

ஷெல்டன் காட்ரெல் மற்றும் ஒஷானே தாமஸ் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்திய அணி சார்பாக நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர்குமார் 2 விக்கெட்டுகளும் , வாஷிங்டன் சுந்தர், கலீல் அகமது, குருணல் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

சுலப இலக்கை துரத்திய இந்திய அணிக்கு, தவான் (1) சொதப்பலாக வெளியேறினார். ரோகித் சர்மா (24) நிலைக்கவிலை.

அடுத்து வந்த பண்ட் ‘டக்’ அவுட்டானார். தொடர்ந்து வந்த மணீஷ் பாண்டே (19) ஏமாற்றினார்.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், மறுபுறம் நிலைத்து நின்று விளையாடிய அணித்தலைவர் கோஹ்லி (19) காட்ரல் வேகத்தில் நடையை கட்ட, இந்திய அணி ஆட்டம் கண்டது.

ஒரு வழியாக ரவிந்திர ஜடேஜா சமாளித்து ஆட, இந்திய அணி 17.2 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 98 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டி -20 போட்டி நாளை லாடர்ஹிலில் நடக்கிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்