அம்பதி ராயுடு விவகாரத்தில் தலைவரின் விளக்கத்தை ஏற்க முடியவில்லை! முன்னாள் இந்திய கேப்டன் கொந்தளிப்பு

Report Print Kabilan in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடருக்கு அம்பத்தி ராயுடுவை தெரிவு செய்யாததற்கு, தேர்வுக்குழு தலைவர் அளித்த விளக்கத்தை ஏற்க முடியவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அசாருதீன் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அம்பத்தி ராயுடு இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழக வீரர் விஜய் ஷங்கர் செய்யப்பட்டார். எனினும், அணியில் யாராவது ஒருவருக்கு காயம் ஏற்பட்டால், அம்பத்தி ராயுடு மாற்று வீரராக சேர்க்கப்படுவார் என்று கூறப்பட்டது.

ஆனால், விஜய் ஷங்கருக்கு காயம் ஏற்பட்டபோது மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அம்பத்தி ராயுடு தெரிவித்தார்.

நேற்றைய தினம், உலகக்கோப்பைக்கான அணியில் பேட்டிங் வரிசை மற்றும் அணியின் கலவையின் அடிப்படையிலேயே அம்பத்தி ராயுடுவை தெரிவு செய்ய முடியாமல் போனது என்று இந்திய தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத்தின் விளக்கத்தை தன்னால் ஏற்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

‘நீங்கள் மாற்று வீரராக ஒருவரை வைத்திருக்கும்போது, ஏதாவது ஒரு மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றால் மாற்று வீரராக வைத்திருக்கும் நபரைத்தான் தெரிவு செய்ய வேண்டும். ஒரு தேர்வுக்குழு தலைவராக நீங்கள் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் விருப்பத்தை மீறலாம். நீங்கள் உங்கள் கருத்தை அவர்களிடம் கூறலாம்.

நீங்கள் கூறியது கேட்க இயலாது. நாங்கள் இந்த வீரரைத்தான் அனுப்புவோம் என்று கூறலாம். நான் கேப்டனாக இருந்தபோது சில வீரர்களை விரும்பினேன். ஆனால், தேர்வாளர்கள் அவர்களை அணியில் சேர்க்க சம்மதம் தெரிவிக்கவில்லை. இது நடந்துள்ளது. அம்பத்தி ராயுடுவை மாற்று வீரராக தெரிவு செய்யவில்லை. இது கவலை அளிக்கிறது. இப்படி நடந்திருப்பதற்கு அவருடைய விளக்கம் ஏற்புடையதல்ல’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்