கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு..! இனி நான் விளையாடுவதை உங்களால் பார்க்க முடியாது: வீடியோவில் உருகிய மலிங்கா

Report Print Basu in கிரிக்கெட்

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளது குறித்து இலங்கை அணியின் அனுபவமிக்க வேகப் பந்துவீச்சாளரான லசித் மலிங்கா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

லசித் மாலிங்க பதிவிட்டுள்ள வீடியோவில் அவர் கூறியதாவது, வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் ஆணையத்திடம் அறிவித்திருந்தேன்.

இந்த நிலையில், இன்றைய தினம் குறித்த செய்தியை உறுதிப்படுத்திக்கொண்டேன். எனது ஓய்வை ஏற்றுக்கொண்ட இலங்கை கிரிக்கெட் ஆணையம், என்னுடைய விருப்பத்துக்கு ஏற்ப முதல் போட்டியில் மாத்திரம் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணிக்காக 16 வருடங்கள் விளையாடி, வெற்றிபெறுவதற்கான சவால்களை எதிர்கொண்டு பங்களிப்பு வழங்கவும், பலரிடம் எதிர்த்து நின்று எனது திறமையினை வெளிப்படுத்தி அணியில் நிலைத்து நிற்கவும் ரசிகர்களின் சக்தி எனக்கு கிடைத்தில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அத்துடன், எனது பின்னால், எனக்கு ஆதரவு வழங்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

அதேநேரம், எதிர்வரும் 26 ஆம் தேதி ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நான் இறுதி ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடவுள்ளேன். முடிந்தால் மைதானத்துக்கு வருகைத்தந்து என்னுடைய இறுதி ஒருநாள் போட்டியை பார்க்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் இதன் பின்னர் நான் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதை பார்வையிட முடியாது.

இதேவேளை, இத்தனை காலமாக என்னை அணியிலிருந்து வெளியேற்ற முயற்சித்த அனைவருக்கும் எனது அனுதாபங்களை தெரிவிக்கிறேன். ஏனென்றால், நான் எனது திறமையின் காரணமாக மாத்திரமே அணியில் இருந்தேன். கிரிக்கெட் வீரர் என்ற ரீதியில் நான் சிறப்பாக செயற்பட்டுள்ளேன் என நினைக்கிறேன் என மலிங்கா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்