வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு தள்ளிவைப்பு! காரணம் டோனியா?

Report Print Kabilan in கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் இந்திய அணி தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு காரணம் டோனி தனது ஓய்வு முடிவை அறிவிக்காதது தான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து, மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி, எம்.எஸ்.கே பிரசாத் தலைமையில் இன்று தேர்வு செய்யப்பட இருந்தது. ஆனால், காயத்தில் உள்ள வீரர்களின் உடற்தகுதி குறித்த அறிக்கை நாளை தான் வரவுள்ளது என்று கூறப்படுகிறது.

மேலும் தேர்வு குழுவில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் பங்கேற்க கூடாது என உச்சநீதிமன்றம் நியமித்த நிர்வாக குழு உத்தரவிட்டது. இதுபோன்ற காரணங்களால் இன்று நடைபெற இருந்த இந்திய அணி தேர்வு, நாளை அல்லது நாளை மறுநாள் நடைபெறும் என்று தெரிகிறது.

எனினும், டோனி ஓய்வு குறித்து இன்னும் அறிவிக்காமல் இருப்பதே, அணித் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதற்கான காரணம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே விராட் கோஹ்லிக்கு இந்த தொடரில் ஓய்வு கொடுக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், அவர் ஓய்வு வேண்டாம் என்று தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், இந்திய அணி தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், டோனி இந்த தொடரில் விளையாடுவாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் பல இளம் வீரர்களுக்கும் இந்த வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்