மிரட்டல் சதம் விளாசிய வில்லியம்சன்.. ஒரு கேட்சால் தகர்ந்த வெஸ்ட் இண்டீஸின் உலகக்கோப்பை கனவு!

Report Print Kabilan in கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் போராடி தோல்வியுற்றது.

நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை லீக் போட்டி நேற்றைய தினம் மான்செஸ்டரில் நடந்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கப்தில், மன்றோ இருவரையும் ஒரே ஓவரில் கோட்ரெல் காலி செய்தார். இருவரும் ஓட்டங்கள் எடுக்காமல் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தனர்.

அதனைத் தொடர்ந்து, கேப்டன் வில்லியம்சன் மற்றும் டெய்லர் இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். பொறுப்பான ஆட்டத்தை கடைபிடித்த இருவரும் அரைசதம் அடித்தனர். அணியின் ஸ்கோர் 167 ஆக இருந்தபோது ராஸ் டெய்லர் 69 ஓட்டங்களில் அவுட் ஆனார்.

அதன் பின்னர் வந்த வீரர்கள் கணிசமாக ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், நங்கூரம் போல் நிலைத்து நின்ற கேப்டன் வில்லியம்சன் சதம் விளாசினார். இறுதியில் 154 பந்துகளில் 14 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 148 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

AP

இதன்மூலம் நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 291 ஓட்டங்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கோட்ரெல் 4 விக்கெட்டுகளையும், பிராத்வெயிட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஹோப்(1), பூரன்(1) இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஹெட்மையர், கிறிஸ் கெய்லுடன் இணைந்து அதிரடி காட்டினார்.

அவர் 45 பந்துகளில் 54 ஓட்டங்கள் விளாசி பெர்குசன் பந்துவீச்சில் அவுட் ஆனார். பின்னர் வந்த கேப்டன் ஹோல்டரும் ஓட்டங்கள் எடுக்காமல் அவுட் ஆனார். இதற்கிடையில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த கெய்ல், அணியின் ஸ்கோர் 152 ஆக இருந்தபோது 87 ஓட்டங்களில் அவுட் ஆனார்.

விக்கெட்டுகள் சரிந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸின் நம்பிக்கை நட்சத்திரமாக பிராத்வெய்ட் தனது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். அரைசதம் கடந்த பின் அதிரடி காட்டிய அவர், வெற்றிக்கு மிக அருகில் அணியை கொண்டு சென்றார்.

மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், கடைசி விக்கெட்டுக்கு தாமஸ் களமிறங்கினார். இதற்கிடையில் பிராத்வெய்ட் 82 பந்துகளில் தனது முதல் சர்வதேச சதத்தை விளாசினார்.

வெஸ்ட் இண்டீஸின் வெற்றிக்கு 7 பந்துகளில் 6 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டது. 49வது ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு விளாச நினைத்து பிராத்வெயிட் அடித்த பந்தை, எல்லைக் கோட்டின் அருகே நின்றிருந்த போல்ட் அபாரமாக கேட்ச் பிடித்தார்.

இதனால் 5 ஓட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ் தோல்வியடைந்தது. சிறப்பாக விளையாடிய பிராத்வெய்ட் அந்த பந்தில் ஒரு ரன் எடுத்து விட்டு, அடுத்த ஓவரில் வெற்றிக்கான ஓட்டத்தை எடுத்திருக்கலாம். ஆனால் அவர் ஸ்மார்ட் கிரிக்கெட் விளையாட தவறிவிட்டார்.

நியூசிலாந்து தரப்பில் போல்ட் 4 விக்கெட்டுகளும், பெர்குசன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த தோல்வியினால் வெஸ்ட் இண்டீஸின் அரையிறுதி வாய்ப்பு மங்கியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers