பாகிஸ்தானுக்கு எதிரான அந்த போட்டி எனக்கு சிறப்பானது: தமிழக வீரர் விஜய் ஷங்கர்

Report Print Kabilan in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானது சிறப்பான விடயம் என்று தமிழக வீரர் விஜய் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்திய அணியில் தவான், புவனேஷ்வர் குமார் காயமடைந்த நிலையில், தமிழக வீரர் விஜய் ஷங்கரும் காயம் அடைந்ததாக தகவல் வெளியானது.

இதனால் அவருக்கு பதிலாக, தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷாப் பண்ட் ஆகியோரில் ஒருவர் இன்று நடக்கும் போட்டியில் சேர்க்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. எனினும், காயமடைந்த விஜய் ஷங்கர் உடல்நலம் தேறிவிட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் விஜய் ஷங்கர் நேற்று நடந்த உடல்நல பரிசோதனையில் பங்கேற்றார். அதன் பின்னர் பேட்டியளித்த அவர் கூறுகையில், ‘உலகக்கோப்பை தொடரில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானது மிகவும் முக்கியமான தருணம். அந்தப் போட்டியில் 2 விக்கெட் வீழ்த்தியது என் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது.

அந்தப் போட்டி எனக்கு சிறப்பானது. என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு போட்டியிலும் முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறேன். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரஷித்கான் மிரட்டுவாரா என்று கேட்கிறார்கள். யாருக்கு எதிராக விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல.

எப்படி விளையாடுகிறோம் என்பதுதான் முக்கியம். ரஷித்கான் குறுகிய ஓவர் போட்டியில் சிறந்த வீரர்தான். அவர் கடந்த போட்டிகளில் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார். ஐ.பி.எல் தொடரில் அவருடன் விளையாடி இருக்கிறேன். அவரை போல வெவ்வேறு விதமாக பந்துவீசுவது முக்கியமானது என நினைக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers