தென் ஆப்பிரிக்காவின் உலகக்கோப்பை கனவை தகர்த்த நியூசிலாந்து! வேதனையில் டூபிளிசிஸ்

Report Print Kabilan in கிரிக்கெட்

பெர்மிங்காமில் நடந்த உலகக்கோப்பை லீக் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது.

உலகக்கோப்பை தொடரின் தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து இடையிலான லீக் போட்டி நேற்று நடந்தது. பெர்மிங்காமில் நடந்த இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

மழை காரணமாக போட்டி 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன் பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 49 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 241 ஓட்டங்கள் எடுத்தது. அபாரமாக விளையாடிய வான் டர் டசன் 67 ஓட்டங்களும், ஹசிம் ஆம்லா 55 ஓட்டங்களும் எடுத்தனர்.

Getty Images

நியூசிலாந்து தரப்பில் பெர்குசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கப்தில் 35 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அடுத்தடுத்த விக்கெட்டுகளை மோரிஸ் கைப்பற்றி மிரட்டினார். எனினும், கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் கிரண்ட்ஹோம் இருவரும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

கிரண்ட்ஹோம் 47 பந்துகளில் 60 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனால் கடைசி கட்டத்தில் நியூசிலாந்து அணி இக்கட்டிற்கு உள்ளானது. இதற்கிடையில் சதத்தை நோக்கி விளையாடிக் கொண்டிருந்த வில்லியம்சன், கடைசி ஓவரில் சிக்சர் அடித்து சதம் விளாசி அணியையும் வெற்றி பெற வைத்தார்.

இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி பீல்டிங்கில் சொதப்பியது. பேட்டிங்கிலும் மந்தமாக செயல்பட்டது. இந்த தோல்வி மூலம் தென் ஆப்பிரிக்க அணி, 6 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு போட்டி மழையால் ரத்து, 4 போட்டிகளில் தோல்விகள் என 3 புள்ளிகளுடன் உள்ளது. இனிவரும் 3 போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட, தென் ஆப்பிரிக்கா அரையிறுதிக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Reuters

இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டூபிளிசிஸ் கூறுகையில், ‘இது மிகவும் கடினமாக போட்டியாக இருந்தது உங்களுக்கு தெரியும். இந்தத் தோல்வியின் வேதனையை நாங்கள் மிகக் கடுமையாக உணர்கிறோம். எங்கள் வீரர்கள் மிகவும் வேதனைக்குள்ளாகி இருக்கிறார்கள்.

இந்தத் தொடர் தோல்விகளால் எனக்கு 5 வயது கூடுதலாகிவிட்டது போல் இருக்கிறது. என் உடல் புண்ணாகிவிட்டதைப் போல் உணர்கிறேன். நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டு செல்கிறோம். ஒரு கேப்டனாக என்னால் அணி வீரர்களிடம் குறிப்பிட்ட அளவுதான் கேட்க முடியும். அவர்களும் முடிந்தவரை போராட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

எங்களுடைய துடுப்பாட்ட வீரர்கள் இன்னும் கூடுதலாக ஓட்டங்களை சேர்த்திருக்க வேண்டும். எதிரணியைப் பார்த்தால், மிகப்பெரிய அளவில் ஸ்கோர் செய்ததைப் பார்க்க முடியும். இளம் வீரர்களான வான் டர் டசன், மார்க்கரம் ஆகியோர் இருந்தும் ஸ்கோர் செய்ய முடியவில்லை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்